OUR CLIENTS
ரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை!
ரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை! Posted on 09-Aug-2018 ரஜினி ரசிகர் மன்றத்துக்கு 25 ஆண்டுகள் உழைத்தவர் ரஜினி மக்கள் மன்றத்தில் 9 மாதம் நீடிக்க முடியவில்லை!

விழுப்புரம், ஆக. 9-

ரஜினி மக்கள் மன்றத்தில் அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். அதாவது 25 ஆண்டுகள் ரசிகர் மன்றத்துக்கு உழைத்தவரால் சில மாதங்களுக்குள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை இயக்குபவர் யார் என்ற கேள்வி ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார் என்று பாட்ஷா திரைப்படத்தில் வசனம் பேசிய ரஜினிகாந்த் தனது அரசியல் இயக்கமான ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நல்லவர்களை கை கழுவுகிறாரா என்ற அச்சம் அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது அரசியல்வாதியாகி விட்ட ரஜினி கடந்த டிசம்பரில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கினார். 9 மாத குழந்தையாக தவழும் மக்கள் மன்றம் எழுந்து நடைபயிலுவதற்குள் பல்வேறு புகார்களில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கிறது. மன்றப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் பணியை தொடங்குவதற்கு முன்பாகவே பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வருவது ரசிகர்களிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி மக்கள் மன்றத்தில் வெளியில் தெரியாமல் பல தில்லாலங்கடி வேலைகள் நடந்து வருகிறது. அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ரஜினி இப்ராஹிம் அதிரடியாக நீக்கப்பட்டார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதைத்தொடர்ந்து அம்மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் இப்ராஹிம் வீட்டின் முன்பு திரண்டனர். அங்கு இப்ராஹிமை மீண்டும் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று அவர்கள் ஆக்ரோஷத்துடன் முழக்கமிட்டனர். ரசிகர்கள் மிகுந்த கோபத்துடனும், எரிச்சலுடனும் கோஷமிட்டனர்.  கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் ரசிகர் மன்றத்துக்காக உழைத்தவர் ரஜினி இப்ராஹிம். அவர் மீது யார் புகார் கூறினாலும் அவரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் விசாரித்து இருக்க வேண்டாமா?. ரஜினிகாந்த்துக்கு தெரிந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இதுபோன்று ரசிகர் மன்றத்துக்கு உழைத்தவரை ஓரங்கட்டலாமா?.

ரஜினி மக்கள் மன்றத்தை வழிநடத்துவது யார் என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது. இது ரஜினி இப்ராஹிமோடு நின்று விடவில்லை. பல மாவட்டங்களில் நடந்தேறியுள்ளது. இப்படி பதவி பறிக்கப்பட்டவர்களில் தேனி மாவட்ட செயலாளர் ஜெயபுஷ்பராஜ், இணைச் செயலாளர் பொன் சிவா, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ் ஆகியோரும் அடங்குவர். இதில் தம்புராஜின் நிலைதான் பரிதாபமாக உள்ளது எனலாம். அதாவது ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட உடனேயே தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு மன்றத்தில் இணைந்தவர் அவர். அரசு வேலையும் போய் மன்றப் பொறுப்பும் இல்லாததால் மீளமுடியாத சோகத்தில் தம்புராஜ் தவித்து வருவதாக தேனி மாவட்ட ரசிகர்கள் கதை கதையாக கூறி வருகின்றனர்.

நீக்கப்பட்ட அத்தனை பேரும் கைநீட்டி குற்றம் சாட்டுவது ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக உள்ள டாக்டர் இளவரசனைத்தான். அதிமுகவில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் இளவரசன். அவரது அண்ணன் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி இளங்கோவன் ஆவார். அவரது பின்புலமும் பணபலமும் இளவரசனை ரஜினியிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அவருக்கு உடனடியாக பதவி தர முடிவெடுத்த ரஜினிகாந்த், கடலூரில் ஏற்கெனவே மாவட்ட தலைவராக இருந்த ஓ.எல்.பெரியசாமியை தூக்கி எறிந்துவிட்டு டாக்டர் இளவரசனை மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்தார். அடுத்தடுத்த மாதங்களில் அமைப்பு செயலாளர் ஒழுங்கு நடவடிக்கை குழுத்தலைவர் என மூன்று பதவிகள்  இளவரசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காலமெல்லாம் ரஜினிகாந்த்துக்காக போஸ்டர், கட்அவுட்டுகளை வைத்த ரசிகர்களை அம்போ என்று ரஜினிகாந்த் நடுத்தெருவில் விட்டு விட்டார். இதுதான் உழைத்தவர்களுக்கு கைமேல் கிடைத்த பலன் போலிருக்கிறது.

இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களால் ரஜினி ரசிகர்கள் புலம்புகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ரஜினிகாந்த் விட்டு வைக்க மாட்டார். ரஜினிகாந்த்துடன் ஆரம்ப காலத்தில் இருந்து உடனிருந்த சத்தியநாராயணா, சுதாகர் ஆகியோரும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜூ மகாலிங்கத்துக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த்துக்கு வேண்டப்பட்ட பலர் பொதுத்தளங்களில் செயல்பட்டு வருகின்றனர். மன்றப் பொறுப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்து தகவல்களைத் திரட்டி ரஜினிக்கு அவர்கள் அனுப்பியவாறு உள்ளனர்.

முக்கிய நிர்வாகிகள் பற்றியும், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரி ஒருவர் வாயிலாக விசாரித்து வருகிறார் ரஜினிகாந்த். அவர்கள் செய்யும் தவறுகளால் மக்கள் மத்தியில் அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக உடனடியாக களை எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படி கூறப்பட்டாலும் ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களுக்கு கிடைத்த பரிசு ஓரங்கட்டப்பட்டதுதான். இதனால் பல நிர்வாகிகள் வெளியில் தலை காட்ட முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ரஜினிகாந்த்தை நம்பி அவர் பின்னால் சென்றவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இப்போதே இப்படி என்றால் இன்னமும் வளர்ந்து கட்சி ஆட்சியை பிடித்து விட்டால் இன்னும் வேறெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையில் ரசிகர்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். ஜெயலலிதா பாணியை ரஜினிகாந்த் தொடருவது, பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அடிக்கடி களையெடுப்பதாக கூறி நிர்வாகிககள் (பழைய நிர்வாகிகள்) மாற்றப்பட்டால் ஆரோக்கியமான நிலையில் ரஜினி மக்கள் மன்றம் செயல்பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை ரசிகர்களும் வலியுறுத்தியுள்ளனர். ரஜினிகாந்த் சற்று வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் ஏகோபித்த விருப்பமாக உள்ளது. ரஜினிகாந்த் இந்த பிரச்னையை சமாளிக்க யார் கூறுவதையும் கேட்டு செயல்படாமல் சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் ரஜினியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label