OUR CLIENTS
முதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,!
முதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,! Posted on 13-Aug-2018 முதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.,!

வேலூர், ஆக. 13-
வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனை மதிக்காமல் செயல்படுவதோடு, பணிக்கு வராமல் இருக்கும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தயக்கம் காட்டுவதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது.

வேலூர் மாவட்டம் என்றாலே அனைத்திலும் சற்று வித்தியாச மாகத்தான் இருக்கும். இதற்கு தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றும் இளங்கோவை உதாரணமாக கூறலாம். அதாவது அவர் பணிக்கு வருவதே இல்லை. உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் விருப்பம்போல பத்திரிகை செய்தி குறிப்புகளை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்துக்கு சரியாக வருகை தருவதே இல்லை. பணிக்கு வராமல் எப்படி இவரால் ஊதியம் பெற முடிகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. அத்துடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை பார்ப்பது என்பது அரிதான விஷயமாகும். அப்படி அவரது இருக்கை காலியாகவே காணப்படும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மது போதையில் பணியில் ஈடுபடுவதாக அவருடன் இருக்கும் சில செய்தியாளர்கள் தரப்பில் பரவலாக கூறப்படுகிறது. இதனால் அலுவலகத்துக்கு வருகை தருவதே இல்லை. இதை எந்த செய்தியாளராவது கேட்டு விட்டால் போதும் நான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் என்று புருடா விட்டு கொண்டு திரிந்து கொண்டுள்ளார். இதுபோன்ற செயல்படாத அலுவலர்களை காத்திருப்போர் பட்டியலில் பணியமர்த்துவதான் சாலச்சிறந்ததாக இருக்கும் என்று ஒரு தரப்பு செய்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் ராமன் கண்டு கொள்ளாமல் விட்டதால் இப்போது ராமன் கையில் உள்ள வில்லை வளைக்கும் அளவுக்கு இளங்கோவன் மாறியுள்ளார். 

மாவட்ட ஆட்சியர் ராமன் அழைத்து பார்த்தும் கூட இந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வருவதில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள். அந்தளவுக்கு மாவட்ட ஆட்சியரிடம் பயம் தெளிந்து விட்டது இளங்கோவுக்கு என்றுதான் சொல்ல வேண்டும். எந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சென்றாலும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்குமார்தான் வருகை தருகிறாராம். செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி இருந்த இடத்தில் இருந்து கொண்டு வசூல் வேட்டையை மட்டும் கனகச்சிதமாக நடத்தி கொள்கிறாராம் இளங்கோ. மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படக்கலைஞர் ஜான் என்பவரை புகைப்படம் எடுக்கச் சொல்வதே இல்லை. இவருக்காக சில புகைப்பட கலைஞர்களை வைத்து படம் பெற்று கொள்கிறார். மாவட்ட ஆட்சியரின் புகைப்படங்கள் தினசரிகளுக்கு அனுப்புவதும் இல்லை. அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்திகளை வேர்டு ஃபைலில் அனுப்புகின்றனர். ஆனால் வேலூர் மாவட்டத்தில் மட்டும்  செய்திகள் ஸ்கேன் செய்து சுலபமாக அனுப்பி விட்டு சென்று விடுகின்றனர். அரசின் செய்திகளை மக்களிடம் சென்றடைய ச் செய்வதே பிஆர்ஓவின் தலையாய வேலை. ஆனால், ஏதோ இவர்கள் கடமைக்கு பணியாற்றுவது போன்று உள்ளது. முக்கியமாக இவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார். திமுகவினருக்கு அரசு தரப்பு விஷயங்களை (ரகசியங்களை) விரிவாக கூறி வருகிறார். அதிமுகவினரிடம் நான் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் என்று சொல்லிக கொள்கிறார். 

அரசின் நற்பெயருக்கு இதுபோன்ற களைகளால் களங்கம் ஏற்படுகிறது. செய்தித்துறை இயக்குநர் சங்கர் இதுபோன்ற மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். பொருமைக்கு ஒரு எல்லை உண்டு. இந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ அனைவரது பொருமையையும் சோதித்து பார்த்து விடுகிறார். தடை செய்யப்பட்ட பத்திரிகைகள், மாத, வார இதழ்கள் மற்றும் பணியில் இல்லாத பத்திரிகையாளர்கள் சிலருக்கு தமிழக அரசு வழங்கும் ஊடகம் என்ற ஸ்டிக்கர், இலவச பயணம் செல்ல இலவச பேருந்து பயண அட்டை போன்றவற்றை தாராளமாக வாரி வழங்கியுள்ளார். இதுகுறித்து இவர் மீது வழக்கு தொடர சில உண்மையான செய்தியாளர்கள் ஆயத்தமாகி உள்ளனர். தற்போது பணியாற்றும் செய்தியாளர்கள் பலருக்கு இவர் ஊடகம் ஸ்டிக்கர் தரவில்லை. அத்துடன் இலவச பேருந்து பயண அட்டை கூட வழங்கவில்லை. இவர் யார் யாருக்கு பணம் வாங்கி கொண்டு இலவச பேருந்து பயண அட்டை, ஊடகம் ஸ்டிக்கர் வழங்கியுள்ளார் என ஆய்வு செய்ய வேண்டும். இதைவிட மெகா ஊழல் நடந்துள்ளது. அதாவது செய்தியாளர்களுக்கு அரசு சலுகை விலையில் வழங்கும் மனைப்பட்டாக்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மனைப்பட்டா பெற்று அதை விற்பனை செய்து விட்டு மீண்டும் மனைபட்டா கேட்டு பலர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ கண்களை மூடிக் கொண்டு மீண்டும் மனைப்பட்டா வழங்க ஆவண செய்துள்ளார். இந்த மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தோர் பட்டியல் சார் ஆட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்படி இவர் எந்த பணியை செய்தாலும் அதில் ஊழல், தில்லு முல்லு, தில்லாலங்கடி வேலைகள் இருக்கவே செய்கிறது. இவரால் வேலூர் மாவட்டம் பின்னடைவை சந்தித்து வருகிறது. பக்கத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை அதாவது 2 ஆண்டுகளில் 3 பிஆர்ஓக்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் இளங்கோவை விட்டால் வேறு யாரும் பணியாற்ற வரமாட்டார்களா? என்ற சந்தேகம் செய்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பணி செய்யவும், அரசின் திட்டங்களை வெளிக்கொணரவும் பணியமர்த்தப்பட்ட ஒரு அரசு அலுவலர் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதை பார்த்து கொண்டு பல செய்தியாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ராமனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று பிஆர்ஓ இளங்கோ கொக்கரிக்கிறார். 

செய்தித்துறை குறித்த மத்திய மாநில அரசுகளால்  அந்த துறைக்கென உள்ள அலுவலகங்களில்  (RNI, DAVP, PIB)   தரப்படும் வழிகாட்டுதல்கள் குறித்த விவரங்கள் ஏதும் இம்மியளவுக்கு கூட இவருக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு தெரிந்திருக்கும் அளவுக்குகூட, பிஆர்ஓவாக இருக்கும் இவருக்கு தெரியவில்லை. பிஆர்ஓவாக பணியாற்ற அடிப்படை தகுதி இல்லையென்றால் அது மிகையாகாது. RNI குறித்த தகவல்கள், விவரங்கள் தெரியாத இவர் எப்படி உண்மையான செய்தியாளர்களை அடையாளம் காண முடியும். தடை செய்யப்பட்ட [DEBLOCKED TITLES]  பத்திரிகையை எவ்வாறு அடையாளம் காண முடியும்?, எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனால் உண்மையான பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரசு சலுகைகள் முறையாக சென்றடைவதில்லை.  செய்திதொடர்பு துறையே தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதுபற்றி தெரிந்துகொள்ளவும் அவர் முயற்சிப்பதாகவும் தெரியவில்லை.   

துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை யார் கேட்டாலும்  தனக்கு தெரியாது என சொல்லி தட்டிக்கழிப்பதே இவரது வாடிக்கையாக உள்ளது.  பல பி.ஆர்.ஓ, க்கள் பணிபுரிந்த இந்த அலுவலகம்  அலுவலக நேரத்தில் பூட்டப்பட்டிருப்பது இவர் இங்கு வந்தபிறகு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் செய்தியாளர்கள் ஏதேனும் கேள்வி எழுப்பினால், நான் முதல்வருக்கு வேண்டிய நபர் என கூறி பதட்டமடைந்து உரத்த குரலில் கத்த  ஆரம்பித்து விடுகிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளைக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றார். இந்நிலை தொடர்ந்தால், அரசுக்கும், முதல்வருக்கும் வேலூர் மாவட்டத்தில் பின்னடைவு என்றுதான் கூறவேண்டும். இவரை பற்றிய நடவடிக்கை குறித்து பல செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணமாக உள்ளது. நடவடிக்கை எடுக்காதது மேலும் சந்தேகத்தை எழுப்புவதுமாக உள்ளது என செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியாக உள்ளது. 

இவர் என்றைக்கு மாற்றப்படுகிறாரோ அப்போதுதான் வேலூர் மாவட்டத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரிவர பணிக்கு வராததால் பணியாளர்களும் சரியாக பணியாற்றாமல் ஏமாற்றும் போக்குக்கு மெல்ல மெல்ல மாறிவிட்டனர். நிலைமை இப்படியே போவது மாவட்ட நிர்வாகத்துக்கு நல்லதல்ல. ஆதலால் விரைவில் மாவட்டத்துக்கு நன்கு சுறுசுறுப்புடனும், அரசுக்கு அவப்பெயர் வராத வகையில் பணியாற்றக் கூடிய நல்லதொரு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை பணி நியமனம் செய்ய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்வர வேண்டும். செய்தித்துறை இயக்குநரும் இவ்வாறே இளங்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. செய்தித்துறையின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label