OUR CLIENTS
நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்
நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல் Posted on 15-Aug-2018 நிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,  ஆக. 15
நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மெகா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள வரலாறு காணாத நிலக்கரி இறக்குமதி ஊழல் பேரதிர்ச்சியடைய வைக்கிறது. 2016 - 2017ம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி. அறிக்கை திரை மறைவில் நடைபெற்ற நிலக்கரி ஊழலின் முகமூடியை கிழித்திருக்கிறது.
அக்டோபர் 2012 முதல் பிப்ரவரி 2016 வரை தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் 1599.81 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சி.ஏ.ஜி அறிக்கை புள்ளிவிவரங் களுடன் வெளியிட்டு அது சட்டப்பேரவையிலும் வைக்கப்பட்டு விட்டது.
தரமில்லாத நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தது, சர்வதேச அளவில் நிலக்கரி விலை குறைந்து கொண்டிருந்த நேரத்தில் அதிக விலை நிர்ணயித்து டெண்டர் போடுங்கள் என்று மின் பகிர்மானக் கழகமே வலியுறுத்தியது, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரத்தை பரிசோதனை செய்ய மின் பகிர்மானக் கழகம் நியமித்த ஏஜென்ஸி, நிலக்கரியின் தரம் பெரிய அளவில் குறைந்து விடவில்லை என்று சான்றிதழ் வழங்கியது என்று மிக மோசமான முறைகேடுகள் மூலம் தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் மட்டும் 1559.81 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதை ஆணித்தரமான ஆதாரங்களுடன் சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அக்டோபர் 2012 முதல் பிப்ரவரி 2016 வரை சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் டன்னின் விலை 92.06 டாலரிலிருந்து 61 டாலராக குறைந்திருக்கிறது. இந்த விலைக் குறைப்புக்கு ஏற்றவாறு விலையைக் குறைக்காமல் நிலக்கரியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் இறக்குமதி செய்யாமல், அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்திருப்பது அரசு ஆவணங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
ஆனால், அந்த ஏஜென்ஸியோ  நிலக்கரியின் தரம் ஒரு சதவீதம் மட்டுமே குறைவாக இருக்கிறது  என்று அறிக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், நிலக்கரியின் தரம் குறித்து பரிசோதிக்க சி.ஏ.ஜி நடத்திய ஆய்வில் ஒப்பந்தப்படியான 6000 மொத்த கலோரிபிஃக் மதிப்பிலிருந்து 3.3 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தரம் குறைவான நிலக்கரி இறக்குமதி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் 607.48 கோடி ரூபாய் மின் பகிர்மானக்கழகத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே 2012 முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தது மட்டுமின்றி, ஒரு ஏஜென்ஸியை நியமித்து தரமற்ற நிலக்கரியை தரமுள்ளதாக சான்றிதழ் கொடுக்க வைத்து மிகப்பெரும் ஊழல் சதி அரங்கேறியிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
மத்திய வருவாய் புலானாய்வுத்துறை அறிக்கை மற்றும் 2016-17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி. அறிக்கை இரண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் 2012 முதல் 2016 வரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி மெகா ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறது.
6,000 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த மெகா ஊழல் குறித்து சி.ஏ.ஜி. மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். அப்படி சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி வழங்க மறுத்தால், நிலக்கரி ஊழல் பற்றி விசாரிக்க திராவிட முன்னேற்றக் கழகமே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Label