OUR CLIENTS
50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு
50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு Posted on 15-Aug-2018 50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு

புதுடெல்லி, ஆக. 15
இந்தியாவின் 72-வது சுதந்திர தினமான இன்று டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார். 50 கோடி இந்தியர்களின் சுகாதார நலன் காக்க சுகாதார காப்பீட்டு திட்டத்தை பிரதமர் வெளியிட்டார். இத்திட்டம் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். 2022-ம் ஆண்டிற்குள் ககன்யான் மிஷன் திட்டப்படி விண்வெளியில் தேசியக்கொடியுடன் இந்தியர்கள் வலம் வருவார்கள் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த கொள்கை தேக்க நிலையையும் செயல் தேக்க நிலையையும் பாஜக அரசு உடைத்து நாட்டில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்திருப்பதாக மோடி கூறினார். சுமார் 82 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் மோடி தூங்கி கொண்டிருந்த இந்திய யானை விழித்தெழுந்தது மட்டுமல்லாமல், ஓட துவங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு சாதித்தவைகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி எதிர்காலத்துக்கான திட்டங்கள் பற்றியும் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.
பிரதமர் தனது உரையில் மகளிர் நலன் பற்றி சிறப்பு கவனத்துடன் மோடி குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தில் குறுகிய கால சர்வீஸ் கமிஷன் அந்தஸ்த்தில் பணியாற்றும் பெண்கள் நிரந்தர சர்வீஸ் அந்தஸ்து பெறும் நிலை ஏற்படுத்தப்படும். அதற்கான நடைமுறை ஒளிவு மறைவற்றதாக அமையும் எனக் கூறினார்.
முஸ்லிம் பெண்கள் முத்தலாக் கூறும் நடைமுறையினால் நெடுங்காலமாக பெரிதும் துயரம் அடைந்ததாக மோடி குறிப்பிட்டார். இதனை மாற்ற நடவடிக்கைகளை அரசு துவக்கும் பொழுது சிலர் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் நான் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். முத்தலாக் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எனது அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்று மோடி குறிப்பிட்டார்.
ஊழல்வாதிகளுக்கும், கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பு இல்லை. கறுப்பு பணம் பதுக்குவோரையும், ஊழல்வாதிகளையும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. பாலியல் குற்றங்கள் செய்வோர் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. பெண்களை மதிக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும். ஆண்களைப் போல் பெண்களும் நிரந்தர அதிகாரம் பெறுவார்கள். நாட்டின் நலன் கருதியே அரசு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.
ஊழலை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அரசு கணிசமான வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் தலைவிதியை பாஜக அரசு மாற்றி வருகிறது. அதற்காக கடினமான முடிவுகளையும் எடுத்து அமல் செய்து வருகிறது. உலகில் உள்ள அனைவரும் மேம்பட்ட நிலையினை அடைவதற்கான வழியினை உலகத்துக்கு இந்தியா வழங்கும் என மோடி குறிப்பிட்டார். தனது கருத்தை உறுதி செய்ய பாரதியாரின் பாடலை தமிழிலேயே தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.
தலித்களையும் பிற்பட்ட வகுப்பினரையும் காக்க அரசு முதல் முக்கியத்துவம் தந்து வருகிறது என கூறினார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் நடக்கும் 5-வது சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள் , வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Label