முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் Posted on 16-Aug-2018
புதுடெல்லி, ஆக. 16-
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணமடைந்தது அறிந்து மிகவும் வருத்தமடைகிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் மோடி கூறுகையில், வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.