OUR CLIENTS
காவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை!
காவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை! Posted on 16-Aug-2018 காவல் துறைக்கு சவால் விடும் கள்ள லாட்டரி விற்பனை!

வேலூர், ஆக. 17&
காவல் துறைக்கு சவால் விடும் வகையில் கள்ள லாட்டரி விற்பனை அமோகமாக வேலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது.
தமிழக அரசு, இத்தனை ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை தடை செய்து வந்தது. அப்போது லாட்டரி சீட்டுகள் என்றால் கலர் பேப்பரில் 20 சேம்,
50 சேம், 100 சேம், 200 சேம் என்ற 6 டிஜிட்டல் எண்களில் கலர் கலராக வந்து கொண்டு இருந்தது. பின்னர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சுத்தமாக லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது. இப்போது ஆங்காங்கே லாட்டரி பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பணத்தை அபகரிக்கும் வகையில் வேலூர் மாவட்டம், காட்பாடியில் படுஜோராக விற்பனையாகி வருகிறது. இதற்கென தனி வியாபாரிகள் துணி பைகளை வைத்து கொண்டு வலம் வருகின்றனர். ரியல் எஸ்டேட் மற்றும் இங்கு செங்கல், மணல், ஜல்லி கிடைக்கும் என்று ஏதோ வியாபாரம் நடத்துவது போன்று போர்டு வைத்து கொள்கின்றனர். அங்குதான் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. காட்பாடி பகுதியில் பெரும்பாலான கடைகள் லாட்டரி விற்பனை செய்யும் கடைகளாகவே இருக்கின்றன.
அத்துடன் ஒன்றிரண்டு கணினிகளை வைத்து கொண்டு ஒற்றை எண் லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். பெங்களூருவில் இருந்து வரும் தனியார் சொகுசு பேருந்துகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக கொண்டு வந்து அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதை மோப்பம் பிடித்த காவல் துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் அவர்களை தனியாக அழைத்துச் சென்று எங்களை மட்டும் கவனித்து விடுங்கள் என்று ஒரு பெருந்தொகையை வாரந்தோறும் ஆட்டையை போட்டு வருகின்றன. இப்படி காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளால் மட்டுமே இதுபோன்ற சமூக விரோத செயல்களும் சரி, தடை செய்யப்பட்ட விற்பனையும் அமோகமாக நடக்க வழிவகை செய்கின்றன. 
ஆனால் இப்போது வந்துள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் இந்த சமூகவிரோதிகளை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா? அல்லது வழக்கம் போல கண்டும் காணாமல் இருந்து கொள்வாரா? என்பதை போகப்போகத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஏழை, எளிய குடும்பங்கள் அன்றாடம் வேலை செய்தால்தான் வாழ்க்கையை நடத்தக்கூடிய சூழல் இருக்கிறது. ஆனால் காட்பாடி பகுதியில் கேரள லாட்டரி 1 எண், 2 எண், 3 எண் என்ற கோணத்தில் ரூ.100 முதல் ரூ.25,000 வரை பரிசு விழும் என்று நம்பி ஏழைகளின் பணத்தை சுரண்டி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வந்துள்ளன. ஆனால் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்க முடியாமல் திருடனை தேள் கொட்டியது போல அமைதி காத்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் முதல் ஓட்டுநர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் காவல் நிலையத்தில் கேட்டால் எங்கள் காவல் சரக எல்லையில் லாட்டரி விற்பனை அடியோடு இல்லை என்றுதான் மறுத்து கூறுகின்றனர். அத்துடன் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால் இருக்கும் புகார்களை பார்ப்பதற்கே நேரம் இல்லை என்கின்றனர்.
ஆனால் காவலர்கள் சீருடை அணியாத நிலையில் லாட்டரி விற்பனை செய்யும் ராஜாக்களிடம் வசூல் வேட்டை மட்டும் நடத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். ஆனால் லாட்டரியில் பணத்தை விட்டுவிட்டுச் செல்லும் தொழிலாளர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. மொபைல் போன் வைத்து கொண்டு பரிசு விழுந்த எண்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலும் மொபைல் போனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒரு எண்ணுக்கு ரூ.100ம், 2 எண்ணுக்கு ரூ.ஆயிரமும், 3 எண்ணுக்கு 
ரூ.25 ஆயிரமும் இதுபோக ஏ,பி,சி என்றும் அத்தோடு 5 எண் வரை வேண்டுமானால் சீட்டின் விலை ரூ.600ம் அதற்கான பரிசுத்தொகை ரூ.10 லட்சம் வரை நீண்டு கொண்டே போவதால் அதன் வியாபாரிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இப்படி ஒரு நெட்வொர்க் சத்தமின்றி நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் சமூகவிரோதிகள் முன்பு கை கட்டி வாய் பொத்தி அவர்கள் போடும் அற்ப ‘ப’ வைட்டமினை வாங்கி கொண்டு எதுவுமே தெரியாதவர்கள் போல சென்று விடுகின்றனர். இந்த நிலை தொடருமா? அல்லது இந்த நிலை மாறுமா? சமூக விரோதிகள் களையெடுக்கப்படுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label