OUR CLIENTS
நெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
நெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! Posted on 16-Aug-2018 நெருக்கடியில் சிக்கியுள்ளாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

வேலூர், ஆக. 17-
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெருக்கடியில் சிக்கியுள்ளாரா? லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு இவருக்கு சவாலாக இருந்து வருகிறது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு எஸ்.பி. கண்ணம்மாள் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதனால் அமைச்சர் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என்ற பரபரப்பு நிலவ ஆரம்பித்துள்ளது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். 
அப்போது தனது வேட்புமனுவில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.18.88 லட்சம், அசையா சொத்து 
ரூ.19.11 லட்சம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அமைச்சரான பிறகு ராஜபாளையம் தேவதானம் அருகே ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும், இதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடி எனவும் தகவல்கள் வெளியானது. எனவே ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த 2013ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் 1996ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவராக ராஜேந்திர பாலாஜி இருந்த காலகட்டத்தில் இருந்து சொத்துக்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். இதற்காக ஒரு எஸ்பியை சிறப்பு அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
இந்த வழக்கு ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்பி கண்ணம்மாள் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாக
லஞ்ச ஒழிப்புத்துறை  சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை பரிசீலிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து அடுத்தகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி அக்டோபர்
8ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தனர் நீதிபதிகள். இதையடுத்து சிறப்பு அதிகாரி கண்ணம்மாள் த¬மையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டீம் விசாரணையில் சொத்துக்குவிப்பு தொடர்பாக முகாந்திரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தால் அமைச்சர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படும். அப்படி பதிவு செய்யப்பட்டால் அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்படும். இதவால் அமைச்சர் தரப்பு பயங்கர அப்செட்டில் இருக்கிறது. எஸ்பி கண்ணம்மாள் தலைமையிலான ஸ்பெஷல் டீம் அதிகாரிகள் கூறுகையில், அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று நூற்றுக்கும் மேள்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 10 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் எல்லோரிடமும் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் கூறுகையில், அமைச்சர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேவதானம் அருகே 35 ஏக்கர் நிலம் வாங்கினார். இந்த விவரத்தை 2016 சட்டசபை தேர்தலில் வேட்புமனுவிலும் குறிப்பிட்டுள்ளார். தேவதானம் சொத்தை வாங்கியதற்கான நிதி ஆதாரம் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான வரவு செலவு உள்பட பல்வேறு ஆவணங்கள் அவரிடம் உள்ளது.
இதுதவிர அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்த மதுரை தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி இதுவரை வெளி உலகத்துக்கு தெரியவில்லை. ஆகவே அவரை யாரோ தூண்டி  விட்டுத்தான் அமைச்சர் மீது வழக்கு போட வைத்திருக்கின்றனர். நிச்சயமாக இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. குறிப்பாக உட்கட்சி பிரச்னையால் பழிவாங்கும் எண்ணத்தில் இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பொறுத்தவரை நல்லவர், நேர்மையானவர் என்றும், அரசுக்கு முறையாக வருமான வரி கட்டி வருபவர் என்று சான்றிதழ் தருகின்றனர் அவரது அடிப்பொடிகள். இந்த வழக்கு விசாரணை முடிவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நல்லவரா? நேர்மையானவரா? என்பது தெரிந்துவிடும். அதுவரை வழக்கு விசாரணை எப்படி போகிறது, சாட்சிகள் எப்படி சாட்சியளிக்கின்றனர், தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label