OUR CLIENTS
மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித் தேர்வை உடனே நடத்த அன்புமணி கோரிக்கை
மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித் தேர்வை உடனே நடத்த அன்புமணி கோரிக்கை Posted on 27-Aug-2018 மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித் தேர்வை உடனே நடத்த  அன்புமணி கோரிக்கை

சென்னை, ஆக. 27
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான போட்டித் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. அந்த போட்டித் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: இளைஞர்களின் வேலைவாய்ப்ப்பு மட்டுமின்றி, மின்சார வாரியத்தின் துரிதமான செயல்பாடு சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 325 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு, அதன்பின்னர் இது மார்ச் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தப் பணிக்கு 87 ஆயிரத்து 378 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்ததனர். உதவிப்பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும் நாள் பிறகு அறிவிக்கப் படும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் இதுவரை 6 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

பொறியியல் படிப்பு முடித்து மின்வாரியத்தில் தொழில் பழகுனராக பயிற்சி பெற்றவர்கள், உதவிப் பொறியாளர் பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே உதவிப் பொறியாளர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்ட போதும், இதேபோன்ற காரணத்தால் பல மாதங்களாக தேர்வு நடத்தப்படவில்லை. 

இப்போதும் நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி போட்டித் தேர்வை தாமதப்படுத்துவது முறையல்ல. தொழில் பழகுனர்கள் தொடர்ந்த வழக்கில், உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித் தேர்வை நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மற்றொருபுறம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 28,000 களப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார வாரியத்தின் அடித்தளமாக வும், உயிர் நாடிகளாகவும் விளங்குபவர்கள் களப் பணியாளர்கள் தான். அவர்கள் இல்லாமல் மின்சார வாரியப் பணிகள் நடைபெறாது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வருகின்றன. இதை உடனடியாக சீரமைக்கவேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், காலியாக உள்ள 28,000 களப் பணியாளர் பணியிடங்களையும், நேர்மையான முறையில் தகுதியுள்ளவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Label