OUR CLIENTS
நான் வென்ற பதக்கம் என் அம்மாவுக்கு சமர்ப்பனம்
நான் வென்ற பதக்கம் என் அம்மாவுக்கு சமர்ப்பனம் Posted on 28-Aug-2018 நான் வென்ற பதக்கம் என் அம்மாவுக்கு சமர்ப்பனம்

ஜகார்த்தா, ஆக. 28-

ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நான் பெற்ற வெள்ளிப்பதக்கத்தை என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்த என் அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தமிழக வீரர் தருண் அய்யாச்சாமி உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவருமான 21 வயது வீரர் தருண் அய்யாச்சாமி வெள்ளிப் பதக்கம் வென்றார். பந்தயத் தொலைவை 48.96 விநாடிகளில் அடைந்து அய்யாச்சாமி 2-வது இடத்தைக் கைப்பற்றினார்.

300 மீட்டர் வரை 4-வது இடத்தில் வந்துகொண்டிருந்த அய்யாச்சாமி கடைசி 100 மீட்டர் தொலைவைக் கடக்கும் போது, புலிப்பாய்ச்சலில் பாய்ந்து, 2 வீரர்களை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்தைக் கைப்பற்றினார்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே ரவுத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் தருண் அய்யாச்சாமி. இவர் 1996, டிசம்பர் 31-ம் தேதி பிறந்தவர். அய்யாச்சாமிக்கு 8 வயது இருக்கும் போது, அவரின் தந்தை காசநோயால் உயிரிழந்தார். அய்யாச்சாமியையும், அவரின் சகோதரியையும், அவரின் தாய்தான் இளவயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்துப் படிக்க வைத்தார்.

பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் தருணின் தாயார். தருணின் சகோதரி பட்டப்படிப்பு முடித்து தமிழக வாலிபால் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். தருண் அய்யாச்சாமி கர்நாடகத்தில் மூடாபத்திரியில் உள்ள ஆல்வா கல்லூரியில் பி.ஏ. இளநிலை படித்து வருகிறார். அங்கு படித்துக்கொண்டு தமிழகத்துக்காக விளையாடி வருகிறார்.

வெள்ளி வென்ற மகிழ்ச்சியால் இருந்த தருண் அய்யாச்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''என்னுடைய சிறுவயதிலேயே என் தந்தை இறந்துவிட்டார். தந்தையின் முகத்தைக்கூட நான் ஆழமாகப் பார்த்தது இல்லை. என்னையும், என் சகோதரியையும் கஷ்டப்பட்டு வளர்த்தவர் என் அம்மாதான்.

எங்களை வளர்க்க எங்கள் அம்மா பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளார். பல்வேறு சிரமங்களையும், போராட்டங்களையும், பணப் பிரச்சினைகளையும் என் அம்மா சந்தித்து எங்களை வளர்த்தார். இப்போது நான் வென்ற இந்த வெள்ளிப் பதக்கத்தை என் அம்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இன்னும் சிறிய தனியார் பள்ளியில் மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்துக்கு ஆசிரியராக என் தாய் வேலை பார்த்து வருகிறார். என்னுடைய லட்சியம், நல்ல வேலைக்குச் சென்று என் அம்மாவை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான். நல்ல வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் போட்டியில் நான் வழக்கமான ஓட்டத்தைத்தான் ஓடினேன். மற்றவர்கள் எப்படி ஓடுகிறார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை. முதல் பகுதி ஓட்டம் வேகத்தில் இல்லை, ஆனால், 2-ம் பகுதியில் நான் வேகமெடுத்தேன். என்னுடைய ஓட்டம் தேசிய சாதனையைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக போலந்திலும், செக்குடியரசிலும் நான் எடுத்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.'' இவ்வாறு அய்யாச்சாமி தெரிவித்தார்.

Label