OUR CLIENTS
கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்- ராமதாஸ் கடும் கண்டனம்
கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்- ராமதாஸ் கடும் கண்டனம் Posted on 30-Aug-2018 கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை வீழ்ச்சிக்கே வித்திடும்- ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, ஆக. 30
கட்டுப்படுத்தப்படாத எரிபொருள் விலை உயர்வு நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அது வீழ்ச்சிக்கு வித்திடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து ரூ. 81.35 ஆகவும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ. 73.88 ஆகவும் அதிகரித்துள்ளன. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளன. இது வளர்ச்சிக்கான அறிகுறி அல்ல.

உலக அளவிலான பொருளாதார, வணிக மாற்றங்களின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வு என்ற உலக அளவிலான வணிக மாற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய மத்திய அரசு, அதை செய்யாதது மட்டுமின்றி, அதன் சொந்தத் தவறுகள் காரணமாக நிகழ்ந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது.

இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி உயரத் தொடங்கிய எரிபொருள் விலை, கடந்த 15 நாட்களில் ஒருமுறை கூட குறையவில்லை. அதே நேரத்தில் 12 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்தியாவில் 2014 - 2015-ம் ஆண்டுகளில் மட்டும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்யாத மத்திய அரசு, அதே அளவுக்கு வரிகளை உயர்த்தியது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மற்றொருபுறம் மாநில அரசுகளும் போட்டிப்போட்டுக் கொண்டு வரி வசூலிக்கின்றன. தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 34% ஆகவும், டீசல் மீதான விற்பனை வரி 25% ஆகவும் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.66 விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் எரிபொருட்களை வருவாய் ஈட்டித் தரும் பொருட்களாக மட்டுமே பார்ப்பதால் வரியைக் குறைக்க மறுக்கின்றன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சிக் குறையும். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது மக்கள் தான். எனவே, வரி வருவாய் என்ற குறுகியப் பார்வையில் இந்த விலை விவகாரத்தை அணுகக்கூடாது. மாறாக பொருளாதார வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வையுடன் இதை அரசு அணுக வேண்டும். உடனடியாக வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலைகள் குறைவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Label