OUR CLIENTS
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ராகுலிடம் குமாரசாமி வலியுறுத்தல்
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ராகுலிடம் குமாரசாமி வலியுறுத்தல் Posted on 30-Aug-2018 கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்திற்கு ராகுலிடம் குமாரசாமி வலியுறுத்தல்

புதுடெல்லி, ஆக. 30
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்–மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி பதவி வகிக்கிறார்.

இந்த கூட்டணி அரசு ஆட்சி அமைத்து இன்றுடன் (30.8.18)  100 நாட்கள்  பூர்த்தி அடைந்துள்ளது. இந்நிலையில் தலைநகர் டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகாவில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் கார்பரேஷன் போர்டு சேர்மன் நியமிக்கவும் விரைவில் முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொண்டேன் என தெரிவித்தார்.

தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட 16 காங்கிரஸ் உறுப்பினர்கள், 10 மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். விதிகளின்படி இன்னும் கூடுதலாக 4 பேர் அமைச்சரவையில் இடம் பெற முடியும். இதில் 3 காங்கிரஸ் உறுப்பினரும் 1 மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினரும் இடம் பெறுவார்கள்.

நாளை மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சித்தராமையா குறித்த கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, அவர் ஒரு தலைவர். அவர் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததில் என்ன தவறு இருக்கிறது. அவரது பாதுகாப்பில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டேவும் கூட முதல்வராக விரும்பலாம். செய்திகளை தவறாக புரிந்து கொண்டு யாரும் திரித்து கூற வேண்டாம் என்று கூறினார்.

தேஷ்பாண்டே தற்போதைய அரசில் வருவாய் துறை அமைச்சராக பதவியில் உள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து குடகு நிவாரண நிதிக்கான திட்டத்தையும் சமர்ப்பிக்க உள்ளார்.

Label