OUR CLIENTS
நீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு!
நீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு! Posted on 31-Aug-2018 நீறுபூத்த நெருப்பாக உள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் உறவு!

வேலூர், ஆக. 31-

அதிமுகவை மத்திய பாஜக அரசு விலக்குவதால் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதனால் நீறுபூத்த நெருப்பாக உள்ள இவர்களது உறவு வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ராஜிநாமா என்ற சொல்லை பயன்படுத்தி ஓபிஎஸ் உருவாக்கியுள்ள பயங்கரமான சூறாவளி அதிமுக வட்டாரங்களில் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த சூறாவளி இதுவரை அடங்கவே இல்லை என்றே சொல்லலாம். இதனால் பெரிய சேதாரங்கள் உருவாகுமா என்பதுதான் இன்று அதிமுகவில் உருவாகியிருக்கும் கேள்வி என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுக செயற்குழுவில் பேசிய ஓபிஎஸ், பாஜக எதிர்ப்பை முதலில் தூக்கிப் பிடித்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னைப் பார்க்காமல் அவமானப்படுத்தினார். அவர் என் தம்பியின் மருத்துவத்துக்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவிக்க அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. ஒன்றரை கோடி உறுப்பினர்கள், 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அதிமுகவை அவமானப்படுத்தி இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.அதற்காக கட்சியை நாம் பலப்படுத்த வேண்டும். நான் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் வலியுறுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன். கட்சி வேலை செய்வதற்கு இந்த பதவி தடையாக  இருக்குமானால் நான் இதை ராஜிநாமா செய்கிறேன். கட்சியில் உள்ள மூத்த அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கட்சிப்பணியாற்றி அதிமுகவை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் பேசிய பேச்சில் அனல் பறந்தது. ஓபிஎஸ்ஸூக்கு முன்பு பேசிய கே.பி.முனுசாமி மற்றும் எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் ஓபிஎஸ்ஸை விட பாஜகவை சற்று காட்டமாக தாக்கி விமர்சித்தார்கள். மத்திய பாஜக அரசு ஆட்டுவிக்கும் பொம்மையாக மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது என பொதுமக்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.

செயற்குழுவில் எழுந்த பாஜக எதிர்ப்பு பற்றி மூத்த தலைவரான பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தாழ்த்தப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு கௌரவமாக நடத்தவில்லை. தமிழகத்தில் பாஜகவுக்கு பலம் இல்லை. அதனால்தான் அதிமுக செயற்குழுவில் பாஜகவுக்கு எதிராகப் பேசியபோது அதை அதிமுக தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றார்கள் என்றார். இதற்கு பதிலளித்த இபிஎஸ், பாஜகவை எதிர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழக அரசு ஜெயலலிதா வழியில் செயல்படுகிறது. மத்திய அரசு செய்யும் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்வதில்லை. தேவையில்லாதவற்றை எதிர்க்கிறோம் என்று செயற்குழுவில் பதிலளித்தார். அதற்கு செயற்குழுவில் பெரிய ஆதரவு இல்லை. அதிமுக செயற்குழு முழுவதும் பாஜக எதிர்ப்பில் ஓங்கி நின்றது. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை. ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டிதான் அதிமுக தொண்டர்களின் கருத்து என்றனர் செயற்குழுவில் கலந்து கொண்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

இதற்கு பின்னணியில் அன்டர்கிரவுன்ட் பாலிடிக்ஸ் மறைந்துள்ளது. அதாவது பாஜக சமீபகாலமாக அதிமுகவிடமிருந்து தனது தொடர்புகளை தள்ளி வைத்து கொண்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் அதிமுக அல்லாத கட்சிகளுடன் பேசி வருகிறது. அதில் திமுகவும் அடக்கம் என்பது அதிமுகவினரை பாஜகவுக்கு எதிராகத் திருப்பி விட்டிருக்கிறது. அதனால்தான் திமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களான கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கம் எம்பியும் பாஜகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஓபிஎஸ்ஸூம் டெல்லியில் தனக்கு நேர்ந்த அனுபவத்தால் பாஜக எதிர்ப்பை ஆமோதிக்கிறார். ஆனால் எடப்பாடியோ பாஜக மீது உள்ள எதிர்ப்பை வெளிப்படையாக காட்ட முடியவில்லை. இந்த பலவீனத்தை வைத்து அவர் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாகத்தான் ராஜிநாமா என்ற அஸ்திரத்தை ஓபிஎஸ் ஏவினார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இந்த பேச்சுக்கு எடப்பாடி பணிந்து ஓபிஎஸ்ஸூக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்தது. மத்திய அரசுடன் எடப்பாடி இணக்கமாக உள்ளார். அத்துடன் கட்சியில் உள்ளவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுகிறார். இதில் இபிஎஸ்&ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதி கொண்டனர். மதுசூதனன், ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மோதி கொண்டனர். அரசு விழாக்களில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாகப் பேசினாலும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. இதற்கிடையே டிடிவி.தினகரன், கே.சி.பழனிச்சாமி தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் இறுதிகட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இவையெல்லாம் எங்குபோய் முடியுமோ என கவலையில் இருக்கிறார்கள் அதிமுகவை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள்.

Label