OUR CLIENTS
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’!
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’! Posted on 31-Aug-2018 டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் 6,000 வீடுகளுக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’!

சென்னை, ஆக. 31-

மழைக்காலம் தொடங்க உள்ளதாலும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் சூழலுடன் இருந்த 6,260 வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. மற்ற தொற்று நோய்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பெரும் சவாலாக உள்ளது. கடந்த 2017ல் தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டனர். 65 பேர் வரை உயிரிழந்தனர். இதனால் நாட்டிலேயே டெங்கு பாதித்த மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகித்தது.

இதையடுத்து நிகழாண்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இரு மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்டது. அப்போது டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நிறுவனம், வீடு, நிலத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஜன., 1ம் தேதி முதல் ஆக., 27ம் தேதி வரை ஏடிஸ் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக 6,260 வீடுகள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 6.62 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.66 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தீவிர நடவடிக்கை &ஏடிஸ் கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் வீடுகள், நிறுவனங்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படுகிறது. தொடர்ந்து ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் சூழல் இருப்பின் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதில் அம்பத்தூர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் அதிகளவில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் சூழல் உள்ளது. தற்போது மழை பெய்துள்ளதால் ஏடிஸ் கொசு அதிகளவில் உற்பத்தியாகும் வகையில் சூழல் உருவாகும். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்புடன் கொசு உற்பத்தி தடுக்கப்படும். இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த கொசுக்கள் டெங்கு, சிக்குன் குனியா போன்ற கொடிய காய்ச்சல்களை உருவாக்குகின்றன. பருவமழை காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொசுக்கள், சமீபகாலமாக ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இந்த வகை கொசுக்களின் வாழ்க்கை சுழற்சி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நல்ல நீரில் முட்டையிட்டு, வளர்ச்சியடைந்த ஏடிஸ் கொசுக்கள் பராமரிக்கப்பட்டன. அவற்றின் சராசரி ஆயுள் காலமான 20 முதல் 25 நாட்களில் இருந்து 40 நாட்களாக அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதனால் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஏடிஸ் எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு வருகிறது. இதை தடுக்க பகல் நேரத்தில் முழுக்கை சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம். அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

வீடுகளில் நீர் தேங்காவண்ணம் பாதுகாக்க வேண்டும். நீரை மூடி வைக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை கொசுக்களை ஈர்க்கும். இதைத்தடுக்க தினமும் இரண்டு முறை குளிப்பது, வியர்வை வாடையை மறைக்க வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.

வீட்டின் உள் பகுதியிலும் சுற்றுப்புற பகுதிகளிலும், நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டைச் சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றி அழிக்க வேண்டும். நோய் பாதிப்பு தோன்றினால் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு போன்ற கஷாயம் குடிக்கலாம்.
காய்ச்சல் தொடர்பான தகவல்களை பெறவும், அளிக்கவும், 044 & 24350496; 044 & 24334811; 94443 40496 என்ற எண்களில், 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Label