OUR CLIENTS
சத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை!
சத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை! Posted on 04-Sep-2018 சத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு வசூல் வேட்டை!

விழுப்புரம், செப். 4-

சத்துணவு பணியாளர் பதவி நியமனத்திற்கு ஆளும் கட்சியினர் சிலர் வசூல் வேட்டை நடத்தி வருவதால், தகுதியானவர்களுக்கு வேலை கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பதவிக்கு கடந்த மாதம் 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் 5ம் தேதி முதல் நேர்காணல் நடக்கவுள்ளது. இதில் பல பதவிகள் மாற்றுதிறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தற்போது பெரும்பாலான அரசு பணிகள் போட்டித்தேர்வு நடத்தி தேர்வு செய்வதால் நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் சத்துணவு துறை பணிகளை பெற கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அமைப்பாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். சமையலர் பதவிக்கு 8 ம்வகுப்பு வரையும், சமையல் உதவியாளர் பதவிக்கு 5 ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதும். ஆனால் இப்பதவிக்கு பிளஸ் 2 படித்தவர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர். பலர் தங்களின் உண்மையான கல்வித்தகுதியை மறைத்து குறைந்த கல்வித்தகுதி உள்ளவர்களாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணத்தால் உண்மையான தகுதி உள்ளவர்களுக்கு பணி கிடைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதால் வேலையை எப்படியும் பெற்றிட வேண்டும் என்பதற்காக பலர் ஆளும் கட்சி உதவியை நாடியுள்ளனர். இதனை அறிந்த ஆளும் கட்சியினர் பலர் சத்துணவு மையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவிகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். ஒரே பதவிக்கு பலபேரிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ள அவலமும் நடந்து வருகிறது. அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பலர் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பகுதியை சேர்ந்த ஆளும் கட்சி நிர்வாகிகளிடம் கொடுத்து வைத்துள்ளனர்.

பெறப்படும் பணம் தங்களுக்கு இல்லை என்றும், மேல்மட்டம் வரை கொடுத்தால் மட்டுமே வேலை உறுதியாகும் என்று வாக்குறுதி கொடுத்து அதிக பணத்தை அப்பாவி மக்களிடம் வாங்கி வருகின்றனர். அமைப்பாளர் பணிக்கு ரூ. 4 லட்சம், சமையலர் பதவிக்கு ரூ. 2 லட்சம், உதவியாளர் பணிக்கு ரூ. 1 லட்சம் வரை கேட்பதாகவும், யாரேனும் அதிக பணம் கொடுக்க முன்வந்தால் குறைந்த தொகை கொடுப்பவர்களை கழட்டி விடுகின்றனர். இத்தொகை சம்பந்தப்பட்ட மையத்தில் ஏற்பட்டுள்ள போட்டியை பொறுத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சத்துணவு மைய பணிக்கு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தினாலும், அவையெல்லாம் வெற்று அறிவிப்பாகவே உள்ளது. அப்பாவிகள் சிலர் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் போலி இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து வைத்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க காலியாக உள்ள சத்துணவு பணிகள் அனைத்தும், ஆளும் கட்சி நிர்வாகிகளின் உறவினர்களுக்கே வழங்க சத்தமின்றி வேலை நடப்பதாக எதிர்கட்சியினர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனைத்து பகுதியிலும் காலியாக உள்ள பணிகள் அந்தந்த பகுதி அ.தி.மு.க., வின் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மேல்மட்ட அளவில் முயற்சி நடப்பதாக குமுறுகின்றனர். சில இடங்களில் தகுதியே இல்லாதவர்களை கூட பணியில் அமர்த்த கூடுதல் பணத்தை வாங்கி கொண்டு ‘டீலிங்’ பேசி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதில் மாற்றுதிறனாளிகள், விதவைகள், ஆதரவற்றவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பணம் கொடுத்தாலும் வேலை கிடைக்குமா என்ற நிலையில் பணத்தை கொடுத்து பலர் பரிதவித்து வருகின்றனர்.

சத்துணவு பணியாளர் பதவியை பெற்றுத்தருவதாக நடக்கும் வசூல் வேட்டை பொதுமக்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல அப்பாவி விண்ணப்பதாரர்கள் பாதிக்கும் அவலம் உருவாகியுள்ளது. இதை தடுக்கும் வகையில், தகுதி அடிப்படையில் சத்துணவு பணியாளர்களை தேர்வு செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Label