OUR CLIENTS
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்!- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்!- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு! Posted on 04-Sep-2018 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்!-  இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை, செப். 4-

அரசு மருத்துவமனை டாக்டர்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை கவனக்குறைவாக மேற்கொண்டதால், 3-வது குழந்தையை பெற்றெடுத்த பெண் ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இதற்கான சான்றிதழை அரசு மருத்துவ மனை நிர்வாகம் வழங்கியது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி கன்னியாகுமரி அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் கருவுற்றிருப்பதாக கூறினர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அரசு மருத்துவமனை டாக்டர்கள் கவனக்குறைவாக செய்த குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையினால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனக்கு 3-வது பெண் குழந்தை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தது. இதையடுத்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட குடும்பநல மையத்தின் துணை இயக்குநர், அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினேன். பின்னர், என்னை பரிசோதனைக்கு அழைத்தனர். நானும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி, கடந்த மே 7, ஜூன் 18 ஆகிய தேதிகளில் பரிசோதனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்யாமல் காலம் கடத்துகின்றனர். எனவே எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந் தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பி.சுடலை யாண்டி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதார துறை செயலாளர், கன்னியாகுமரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நா.ருக்மணி கூறியதாவது:

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்ட 7 நாட்களுக்குள் அவர்களுக்கு டயூபெக்டமி எனும் குடும்பக் கட்டுபாடு சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதில், கருப்பைக்கு அருகில் உள்ள இரு குழாய்களில் சிறிய பகுதி (அதிகபட்சம் 0.5 செ.மீ) வெட்டி அகற்றப்படும். இதன்மூலம் அவர்கள் நிரந்தரமாக குழந்தை பெறும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த சிகிச்சை செய்துகொண்ட 1 முதல் 2 சதவீதம் பேருக்கு கிசிச்சை பலனளிக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது.ஆண்களுக்கு வாசக்டமி சிகிக்சை மேற்கொள்ளப்படுகிறது. இதை எப்போது வேண்டுமானாலும் ஆண்கள் செய்துகொள்ளலாம். இதுதவிர, தற்காலிகமாக குழந்தை பெற விரும்பாத தம்பதியினர் ஊசி போட்டுக்கொள்ளலாம். இந்த ஊசியை 3 மாதங்களுக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். மாத்திரைகளைப் பயன்படுத்த விரும்புவோர் வாரம் ஒருமுறை பயன்படுத்த வேண்டும். 5 முதல் 10 ஆண்டுகள் வரை குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதோர் காப்பர்-டி வகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Label