OUR CLIENTS
ஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை!
ஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை! Posted on 05-Sep-2018 ஓபிஎஸ் பாதுகாப்பு பணியில் போலீஸ் மணல் கடத்தல் கும்பல் ஜரூர் வேட்டை!

வேலூர், செப். 5-

தமிழக துணை முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் வேலூர் வந்ததால் வேலூர், காட்பாடி பகுதி போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மணல் கடத்தும் கும்பல் ஜரூராக மணல் கடத்தி விற்பனை செய்து ஒரு பெருந்தொகையை பார்த்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மணல் கடத்தி விற்பனை செய்து பலர் கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர். பலர் லட்சாதிபதி ஆகியுள்ளனர். இப்படி மணல் திருட்டு தொழில் கொடிகட்டி பறக்கும் பகுதியாகி வேலூர் மாவட்டம் திகழ்கிறது. இந்நிலையில் தமிழக அளவில் ஆற்று மணலை எடுக்க கூடாது என்று தமிழக அரசு சட்டம் போட்டு தடுத்து வருகிறது. இந்நிலையில் அரசும், அரசு அதிகாரிகளும் எவ்வளவு தடுத்தாலும் அதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது.

அதாவது வேலூரில் நேற்றுமுன்தினம் நடந்த அதிமுக அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக துணை முதல்வரும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதனால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசார் சென்று விட்டனர். இதனால் காவல் நிலையங்களில் எழுத்தர் தவிர வேறு யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு மணல் கொள்ளையர்கள் நேற்றுமுன்தினம் காலை முதல் விடிய, விடிய இரவு முழுவதும் 24 மணி நேரமாக மணல் கடத்தல் ஜரூராக நடந்தது. இதனால் பலரும் லட்சக்கணக்கில் வாரி குவித்தனர். அத்துடன் ரூ.3 ஆயிரத்துக்கு டயர் வண்டியில் கடத்தி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மணல் நேற்றுமுன்தினம் ரூ.3 ஆயிரத்து 900க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலை தினமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

முதல் நாள் மாலை வேளையில் டயர் வண்டி மணல் வேண்டுவோர் ரூ.3,900 கொடுத்து விட்டால் போதும் விடிவதற்குள் மணல் ஒரு டயர் வண்டி கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இப்படி மணல் தங்கத்தை காட்டிலும் விலை உயர்ந்த நிலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மணல் விற்பனை செய்வதில் ஈடுபாடு அதிகம் கொண்டு செயல்படுகின்றனர். வேகமாக பணக்காரன் ஆவதற்கு மணல் கடத்தி விற்பனை செய்தால் போதும் என்று தெரிந்து கொண்ட மணல் கடத்தல் கும்பல் இந்த தொழிலை தேர்வு செய்து ஒரு கட்டடத்தை தேர்வு செய்து வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் என்ன? பங்களா என்ன? என்ற வாழ்க்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் வந்து சென்றதால் மணல் கடத்தல் கும்பல் காட்டில் அடைமழை ஒரே நாளில் பெய்து விட்டது என்றே சொல்லலாம். இதுபோன்று துணை முதல்வர், விஐபிக்கள் வேலூருக்கு வந்து போகமாட்டார்களா என்று ஏங்கும் நிலைக்கு மணல் மாஃபியாக்கள் வந்துவிட்டனர். டயர் வண்டி மணல் ரூ.1500க்கு விற்பனை செய்து வந்தது மாறி இன்று அதே ஒரு வண்டி திருட்டு மணல் ரூ.3,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. வருவாய்த்துறையினர், கனிம வளத்துறையினர், காவல் துறையினர் என்று யாரையும் பற்றி கவலைப்படாமல் மணல் திருடும் கும்பல் தைரியமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவர்களது பின்புலமாக அரசியல் இருக்கிறதோ இல்லையோ, பண பலம் மட்டும் இருந்தால் போதும் எதையும் வென்று சாதித்து காண்பிக்கலாம் என்ற நிலை நீடித்து வருகிறது. இதனால் மணல் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

பெயரளவுக்கு ரெய்டு நடப்பது எல்லாம் கண்கட்டி வித்தையாக உள்ளது. இதனால் விரைவில் கேரளத்தில் இருப்பது போன்று கடும் கெடுபிடி கொண்டு வந்தால் மட்டுமே மணல் விற்பனை அடியோடு தடுத்து நிறுத்த முடியும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். தமிழகத்தில் உள்ள ஆறுகளில் அரசியல்வாதிகள் முதல் அன்றாடம் காய்ச்சி வரை மணல் திருடி பிழைப்பு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையை தடுத்து நிறுத்த மக்களும் அரசோடு கைகோர்த்தால் நலன் பயக்கும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மணலுக்கு தட்டுப்பாடும், ஏக கிராக்கியும் ஏற்பட்டு விட்டது, இந்நிலையில் சென்னை மாநகரில் மட்டும் தங்குதடையின்றி மணல் கிடைக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த திருட்டு மணல் கடத்துவது அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Label