OUR CLIENTS
மாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்!- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’!
மாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்!- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’! Posted on 05-Sep-2018 மாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்!- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’!

சென்னை, செப். 5-

மாதவரம் மண்டலத்தில், மாநகராட்சி மூலம் அமைக்கப்படும் புதிய தார் சாலைகள் ஒரே மாதத்தில் மண் குவியலானது. 

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மண்டலத்தின் 25வது வார்டு, புழல் அடுத்த பத்மாவதி நகர், பாலாஜி நகர், பிர்லா அவென்யூ, ஜெய்மாருதி நகர் சுற்றுவட்டாரங்களில், சுப்ரமணி, குமார், ராமாராவ், கன்ஸ்ட்ரானிக்ஸ் லிட்., ஆகிய நான்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் 44 தார் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள குறுக்கு சாலைகள் 300 அடி முதல் 800 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்டவை. பிரதான சாலைகள் 1,200 அடி நீளம், 24 அடி அகலமும் கொண்டவை. மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள், பாதாள சாக்கடை திட்டப்பணியால் மண் குவியலாகின.

இந்நிலையில், கடந்த மாதம் பத்மாவதி நகர் பிரதான சாலை, 6, 7, 8, 9, 10 ஆகிய தெருக்கள் உட்பட எட்டு தெருக்களின் குறுக்கு சாலைகள் 1.10 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன.ஆனால், அந்த சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து மண் குவியலாக மாறிவிட்டன. அவற்றில் கடந்த வாரம் தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் சாலைகள் உறுதியற்ற நிலையில் உருக்குலைந்து வருகின்றன. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தால் மிச்சமுள்ள சாலையும், மண் குவியலாகி விடும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும், தார் வேயப்படாத சாலைகள், சேறும், சகதியும் நிறைந்து, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் பத்மாவதி நகர் சுற்றுவட்டாரங்களில் வசிப்போர், இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். மேலும், பிர்லா அவென்யூ, பாலாஜி நகர், ஜெய்மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், இன்னும் சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை.சென்னை மாநகராட்சி கமிஷனர், மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தால், அவற்றின் தரம் தெரியவரும்.

எங்கள் பகுதிகளில், அவசர கோலத்தில், சாலைகள் போடப்படுகின்றன. 2015ம் ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டும் பெருக்கெடுக்கும் என்று கூறப்படுகிறது. அருகில் உள்ள, பொதுப்பணித்துறை உபரிநீர் கால்வாய் நிரம்பினால், வெள்ளம் பெருக்கெடுத்து, இங்குள்ள நகர்களை மூழ்கடிக்கும். அப்போது, புதிய தார் சாலைகள் ஒன்று கூட இருக்காது. தற்போது, சிறிய ரக வாகனங்கள் சென்று வரும் நிலையிலேயே ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தரமான சாலைகளை போட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

Label