OUR CLIENTS
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்!
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்! Posted on 07-Sep-2018 பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலம்!

திருவண்ணாமலை, செப். 7-
 
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்துள்ள பெரணமல்லூர் பகுதியினைச் சுற்றிலும் உள்ள கிராமப்புற பகுதியில் பெரும்பாலன பொதுமக்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனையினை நம்பி அருகில் உள்ள பெரணமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்குதான் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த சுகாதார மையத்தில் 5 பணியிடங்களுக்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தவிர இரவு பணிக்கு டாக்டர்கள் இல்லாததால் மையத்திற்கு வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: நாங்கள் ஏழை நடுத்தர குடும்பத்தில் உள்ளதால் எங்களில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள பெரணமல்லூர் சுகாதார மையம் சென்று சிகிச்சைக்கு பெற்று வருகிறோம். மேலும், எங்கள் பகுதியிலிருந்து பெரணமல்லூருக்கு வர குறிப்பிட்ட நேரத்திற்கு தான் பஸ்வசதி உள்ளது. ஆகையால் காலையில் 8 மணிக்கே சுகாதார நிலையம் வந்து விடுகிறோம். ஆனால் டாக்டர்கள் வருவதற்கு 10 மணிவரை காத்திருக்க வேண்டியதாக உள்ளது. அவ்வாறு வரும் டாக்டர்கள் 11 மணிக்கு மேல் பணியில் இல்லாமல் அருகில் உள்ள ஏசி அறையில் ஓய்வெடுக்க சென்று விடுகிறார்கள். 

அத்துடன் 10 நிமிடங்களில் வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர். இதனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க இருப்பதில்லை. இதனால் கிராமத்தில் இருந்து வரும் நோயாளிகள் அடையும் சிரமத்துக்கு அளவே இல்லை என்றே சொல்லலாம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கடமையை சரியாக செய்து வரும் ஒரு நேர்மையான அதிகாரியாக உள்ளார். அவராவது கிராம மக்களின் உயிர்மேல் அக்கரை செலுத்தி இந்த சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் தங்கி வேலை பார்க்க ஏற்பாடு செய்து தந்தால் நலமாக இருக்கும் என்று கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மருத்துவர்கள் இல்லாத நேரத்தில் சுகாதார நிலையத்தை நாடி வரும் நோயாளிகள் செவிலியர்களிடம் நோயின் நிலையை கூறி அவர்கள் தரும் மருந்தை வாங்கி செல்லும் பரிதாப நிலை நிலவுகிறது. இவர்கள் இதுபோன்ற பணியை செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்துடன் எம்பிபிஎஸ் படித்தவர்கள் செய்ய வேண்டிய பணியை செவிலியர்கள் செய்வது எவ்வகையில் நியாயம். மனிதாபமுறையின் செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் சூழ்நிலை நிலவுகிறது. 

மருத்துவர்கள் பணி செய்யவில்லையா அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஆனால் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ குட்கா வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். அவர் வீட்டில் நடத்தப்படும் ரெய்டு போன்று அரசு மருத்துவர்கள் வீடுகளிலும் திடீர் ரெய்டுகள் நடத்தப்பட வேண்டும். மக்கள் வரிப்பணத்தை ஊதியமாக வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டக் கூடாது,. மேலும், இங்கு பெரும்பாலான நேரத்தில் டாக்டர்களுக்கு பதில் செவிலியர்கள் டாக்டர் பணியினை செய்து வருகிறார்கள். மேம்படுத்தப்பட்ட இந்த சுகாதார மையத்தில் 24 மணி நேரம் டாக்டர்கள் இருப்பார்கள் என அரசு சொல்கிறது.   

ஆனால் இங்கோ 4 மணி நேரம் கூட அவர்கள் பணியில் இருப்பது கிடையாது. தவிர இரவு நேரத்தில் காய்ச்சல் மற்றும் விஷ பூச்சிக்கள் ஏதாவது கடித்து விட்டால் இங்கு வந்தால் முதலுதவிக்கு மருத்துவர்கள் இருப்பது இல்லை. அவ்வாறு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களே முதலுதவி அளித்து செய்யாறு, வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து விடுகிறார்கள். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் உள்ள சுகாதார மையங்களில் டாக்டர்கள் நியமித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவத்துறையும், மாவட்ட நிர்வாகமும் என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label