OUR CLIENTS
பண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்!
பண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்! Posted on 07-Sep-2018 பண்ருட்டியில் புதிதாக தொடங்கிய தொடக்கப்பள்ளிக்கு பணிக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள்!

பண்ருட்டி, செப். 7-

பண்ருட்டி அருகே புதிதாக தொடங்கிய இணைப்பு தொடக்கப்பள்ளிக்கு  ஆசிரியர்கள் வர மறுத்ததால் தற்போது முன்னாள் ஆசிரியரை கிராம மக்கள் நியமித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காவனூர் ஊராட்சி, உளுந்தாம்பட்டு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அருகில் உள்ள காவனூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியாக பள்ளி  வேண்டும் என பத்து வருடமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உளுந்தாம்பட்டு பள்ளிக்கு  காவனூர் மாணவர்களை அனுப்ப மறுத்துவிட்டனர். 

இது தொடர்பாக மாவட்ட  ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 4ம் தேதி நடந்த குறைகேட்பு  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், காவனூர், உளுந்தாம்பட்டு, மக்களிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக உளுந்தாம்பட்டில் உள்ள பள்ளியில் காவனூர் மாணவர்கள்  செல்வதில் சிக்கல் உள்ளது என அதில் கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காவனூர்  கிராமத்துக்கு இணைப்பு பள்ளியை வட்டார கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் வந்தபோது ஆசிரியர்களும் தொடங்கிய நாள் மட்டுமே வந்து கல்வி போதித்தனர். 4, 5, ஆகிய இரு தினங்களில் பாடம் சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்கள் வர மறுத்துவிட்டனர். 

இதனால் மாணவர்கள் வகுப்பறையில் கல்வி கற்க முடியாமல் அமர்ந்திருந்தனர். இதனால் பெற்றோர்கள் அவசர கூட்டம் கூட்டி முடிவெடுத்தனர். இதில் ஆசிரியர்கள் வராததால் நமது கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரும், பத்திரிகையாளருமான சகுந்தலாநாராயணன் என்பவரை கல்வி போதிக்க செய்தனர். சத்துணவு சமைப்பதற்கும் உள்ளூர் சமையலரை வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ஆசிரியர்கள் தினம் என்பதால் ஆசிரியர்கள் வருவார்கள் என நினைத்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசு ஆசிரியர் பணி மட்டும் தங்களுக்கு வேண்டும். அரசு வழங்கும் 7வது நிதி கமிஷன் ஊதியமும் வேண்டும். இன்ன பிற அரசு சலுகைகளும் வேண்டும். ஆனால் பணி மட்டும் செய்ய மாட்டோம் என்பது சரியானதாக தெரியவில்லை என்று ஆசிரியர்கள் மீது கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தனியார் பள்ளியில் ஊதியம் குறைவு வேலைப்பளு அதிகம். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களோ ராஜா வீட்டு கன்னுக்குட்டி போன்று ஹாயாக வேலைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதில் குறிப்பாக ஆசிரியர்கள் பெரும்பாலும் கணவனும், மனைவியும் பணியாற்றுவதே பெரும்பாலும் நடக்கிறது. இரண்டு சம்பளம் பெற்று ருசி கண்ட பூனைகள் ஆசிரியர்கள். ஆனால் கிராமத்து பாமர மக்களின் பிள்ளைகளுக்கு எழுத்தறிவு சொல்லி கொடுக்க வர மறுக்கின்றனர். ஆசிரியர்களைத்தான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்த கூற்றை பண்ருட்டி அருகேயுள்ள உளுந்தாம்பட்டு பகுதியில் பொய்யாக்கி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இந்தப் பள்ளிக்கு பணி நியமனம் செய்யப்பட்டு பணிக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியர் யாராக இருந்தாலும் அவர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்கள் ஒழுங்காக பணிக்கு வருவார்கள். இல்லையெனில் இப்படித்தான் அரைகுறையாக இருக்கும். இப்போது பாதிக்கப்படுவது கிராம ஏழை எளிய மாணவர்களின் கல்விதான் என்று சொன்னால் அது மிகையாகாது. இதை முதலில் ஆசிரியர்கள் உணர வேண்டும். பள்ளிக்கு பணிக்கு வர மறுப்பது எவ்வகையில் நியாயம். அவர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். இதுபோன்று ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவது மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் என்ன ஆண்டவனா என்று கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.இப்படி நடவடிக்கை எடுத்தால் ஆசிரியர் சங்கங்கள் கொடி பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதுபோன்ற ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் உறுதுணையாக செயல்பட கூடாது என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து  காவனூர் கிராம பெற்றோர்கள் கூறியதாவது: உளுந்தாம்பட்டில் இயங்கி வரும் பள்ளிக்கு எங்கள் கிராமத்திலிருந்து பிள்ளைகள் செல்வதில் மிகுந்த சிரமம்  உள்ளது. 
நாங்கள் தனியாக கேட்ட பள்ளி தற்போது கிடைத்துள்ளது, இந்த பள்ளிக்கு தேவையான இடங்கள் 20 சென்ட் 2009ம் ஆண்டே வாங்கி வைத்துள்ளோம். காவனூர்  பகுதி பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் வரவில்லை என உளுந்தாம்பட்டு பள்ளியில் கேட்டபோது எங்களுக்கு போதிய அளவிற்கு மட்டுமே ஆசிரியர்கள் உள்ளனர். மீறி ஆசிரியர்கள் சென்றால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறினர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காவனூர் பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label