OUR CLIENTS
ஊழல் குற்றச்சாட்டுகளை மன தைரியத்தோடு எதிர்கொள்வோம் - ஆர்.பி.உதயகுமார்
ஊழல் குற்றச்சாட்டுகளை மன தைரியத்தோடு எதிர்கொள்வோம் - ஆர்.பி.உதயகுமார் Posted on 09-Sep-2018 ஊழல் குற்றச்சாட்டுகளை மன தைரியத்தோடு எதிர்கொள்வோம் - ஆர்.பி.உதயகுமார்

மதுரை,   செப். 9-
எங்கள் மீது தொடரப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை மன தைரியத்தோடு எதிர்கொள்வோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலையொட்டி அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் சைக்கிள் பேரணி, திண்ணைப் பிரசாரம் மற்றும் நடைபயணம் என தேர்தல் பணிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்றது.  ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம். இத்தொகுதியில் உள்ள 295 வாக்குச்சாவடிகளுக்கு தலா 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேர்தல் பிரசாரப் பயிற்சி வழங்க உள்ளோம். தொகுதி முழுவதும் மக்கள் குறைதீர்க் கூட்டங்களை நடத்தி, அதிமுக அரசின் சாதனைகளை முன்னிறுத்தி இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். விநாயகர் சதுர்த்தியன்று தனக்கன்குளத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளோம்.

நாங்கள் எதிரியாக கருதுவது ஓரளவு வாக்கு வங்கி உள்ள திமுகவைத் தான். எங்கள் சாதனைகளைச் சொல்லி நிச்சயம் வெற்றி பெறுவோம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சந்தித்த சவால்களை விட தற்போது அதிமுக கூடுதலாகச் சந்தித்து வருகிறது. இருப்பினும் அவற்றைக் கடந்து மக்கள் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். பொதுவாழ்க்கையில் இருப்பதால் பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது பழகிவிட்டது. எங்கள் மீது தொடரப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை மனதைரியத்தோடு எதிர்கொள்வோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Label