OUR CLIENTS
பாரத் பந்த்: வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பார்கள்- ராகுல் காந்தி சூளுரை
பாரத் பந்த்: வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பார்கள்- ராகுல் காந்தி சூளுரை Posted on 10-Sep-2018 பாரத் பந்த்: வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிப்பார்கள்- ராகுல் காந்தி சூளுரை

புதுடெல்லி, செப். 10-
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சிறு-குறு தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்பட பல தொழில்களில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த கோரியும் 10-ந்தேதி (இன்று) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத் தது. காங்கிரசுக்கு நாடு முழுவதும் 21 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

கட்சிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் ஏராளமான வணிக-தொழில் அமைப்புகளும், வணிக சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. தொழிற்சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக களம் இறங்கின. வட மாநிலங்களில் சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட பல கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தன. எதிர்க்கட்சிகள் அறிவித்தப்படி இன்று (திங்கட்கிழமை) நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. ஆனால் தமிழ் நாட்டில் முழு அடைப்பு போராட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பஸ், ரெயில், ஆட்டோ, தனியார் வாகனங்கள், பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியதால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

ஆனால் வடஇந்தியாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பு முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஒன்று திரண்டு ஊர்வலம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். முன்னதாக காலை 8.25 மணிக்கு ராகுல்காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவர் மலர் தூவி காந்திக்கு மரியாதை செலுத்தினார்.

பிறகு ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். ராகுலுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து முழக்கம் எழுப்பியபடி வந்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் விலை உயர்வுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். ஊர்வலம் ராம்லீலா மைதானத்தை அடைந்ததும் அங்கு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் மிக பிரமாண்டமான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தின. இதற்காக தலைவர்கள் அமர பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி மேடையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களுடன் கூட்டணி கட்சித் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், சரத்பவார், சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் திரண்டிருந்தனர். அவர்கள் பா.ஜ.க. அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர். டெல்லியில் பல இடங்களில் காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். மராட்டியம், குஜராத், பீகார் மாநிலங்களில் பெரிய அளவில் மறியல்கள் நடத்தப்பட்டன. மராட்டியத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மன் சேனா தொண்டர்களின் போராட்டம் போலீசாருக்கு சவால் விடும் வகையில் இருந்தது.

மும்பை, செம்பூரில் கழுதை கழுத்தில் பிரதமர் மோடி படத்தை தொங்கவிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் தொண்டர்களும், ஜன் அதிகார் கட்சி தொண்டர் களும் ரெயில்களை மறித்து போராட்டம் நடத்தினார்கள். மும்பையில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. ஆனால் ஆட்டோ-டாக்சி வழக்கம் போல ஓடின. சில இடங்களில் வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.

திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை. பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை. கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கர்நாடகத்தில் இன்று பெங்களூர், மங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை. பெங்களூரு அரசு பஸ்கள் இயங்கவில்லை. மாநிலம் முழுவதும் தனியார் பஸ்கள் ஓட வில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை. தனியார் டாக்சி நிறுவனங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வாடகை கார்களும் இயங்கவில்லை. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கர்நாடகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரு சில பெட்ரோல் பங்க்குகளை தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை. பெங்களூரு நகரில் முக்கிய வணிக வளாகங்கள் இன்று காலை 6 மணி முதல் திறக்கப்படவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை.

குஜராத் மாநிலத்தில் ஏராளமான இடங்களில் காலை மறியல் நடந்தது. முக்கிய சாலைகளில் காங்கிரசார் டயர்களை எரித்தனர். இதனால் குஜராத்தில் முக்கிய நகரங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியது. ராஜஸ்தான், அசாம், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானா, ஒடிசாவில் காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக பஸ் மற்றும் ரெயில் மறியல்களில் ஈடுபட்டனர். இதனால் வட மாநிலங்களில் பல நகரங்களில் சாலைப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மராட்டிய மாநிலம் புனே நகரில் அரசு பஸ்சுக்கு நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தீ வைத்தனர். இதில் அந்த பஸ் எரிந்து நாசமானது. பெங்களூரில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. கிழக்கு ரெயில்வே மண்டலம் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களை ரத்து செய்தது. ஜெய்ப்பூர், சூரத், லக்னோ, பாட்னா, புவனேசுவரம், ஆக்ரா, சண்டிகர், கயா, கவுகாத்தி உள்பட பல நகரங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மைசூரில் சுற்றுலா பயணிகள் வருகையில் 60 சதவீதம் குறைந்திருந்தது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் வழக்கம் போல ஓடின. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. விஜயவாடாவில் பாதி கடைகள் மூடப்பட்டு இருந்தன. மும்பையில் 9.45 மணி அளவில் காங்கிரசார் அசோக் சவான் தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

முழு அடைப்புப் போராட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனவே வட மாநிலங்களில் இன்று மாலை இயல்பு நிலை திரும்பும்.

Label