OUR CLIENTS
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018ஐ வெளியிட்டார் முதல்வர்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018ஐ வெளியிட்டார் முதல்வர் Posted on 10-Sep-2018 தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை 2018ஐ வெளியிட்டார் முதல்வர்

சென்னை, செப். 10-
2018ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கையை தமிழக முதல்வர் கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

தமிழக அரசின் புதிய தகவல், தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இன்றைய தொழில்நுட்ப மேம்பாடுகளை அனைவரும் பயன்படுத்த உதவிகரமாக அமையும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

முதலீட்டார்கள் குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் குறு, சிறு, தொழில் நிறுவனங்கள் புதிதாக துவக்கப்படும் தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, இந்தக் கொள்கை பயன்படும் என்று நிர்வாக ஊக்குவிப்புகள், நிதி ஊக்குவிப்புகள், மூலதன மானியங்கள், வரிவிலக்குகள், சிறப்பு மானியங்கள் ஆகியவை தொழில் நிறுவனங்கள் பெற புதிய கொள்கை வழிவகுப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். புதிதாகத் துவக்கப்படும் நிறுவனங்களுக்கு துவக்க கால உதவிகளை வழங்கவும் ஆராய்ச்சிப் பூங்காக்களைத் துவக்கவும் இந்த கொள்கையின் மூலம் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.

மாசு ஏற்படுத்தாத பசுந்தொழிகளுக்கு விருது வழங்குதல் ஒற்றைச் சாளர வசதி, அரசின் அனுமதிகளை விரைவாகப் பெற வசதி ஆகியவைகளுக்கும் இந்தக் கொள்கை பயன்படும் என்று அவர் தெரிவித்தார். இரண்டாவது உலகு தழுவிய முதலீட்டாளர் மாநாடு சென்னையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்தார்.

பிரபல தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு குறு, சிறு தொழில் துறையில் தமிழகத்தில் தொடர்ந்து முதலீடு செய்யும்படி கேட்டுக்கொள்வதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். கூடுதல் முதலீடு தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி பெருக வகை செய்யும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்தார். இந்நிகழச்சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் கலந்தாய்வுக் கூட்டத்தையும் முதல்வர் கே. பழனிசாமி துவக்கிவைத்தார். 

முதல்வர் பழனிசாமி கூறிய விவரங்கள் வருமாறு: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் Madras Institute of Technology  வளாகத்தில், திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி மையமும்  மற்றும் ஐந்து பொறியியல் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்களும்  மாண்புமிகு அம்மாவின் அரசால் நிறுவப்பட்டுள்ளன.

M/s. SIEMENS மற்றும் DESIGN TECH LTD என்ற தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி மதிப்பீட்டில், இச்சிறப்பு பயிற்சி மையங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் திறன்களை மாணாக்கர்களிடையே மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறனை அதிகரிக்கச் செய்தல் , தொழிற்சாலைகளின் தற்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறனை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  

இத்திட்டத்தின் மூலம் பட்டய மற்றும் பட்ட வகுப்புகளில் பயின்று வரும் தொழில் நுட்ப மாணவர்களுக்கும் தொழிலகங்களிலிருந்து கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கும், திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, அவர்களுக்கு எளிதாக வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

"தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில், வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்வதைப் போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும்  மாணாக்கர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைத்திடும் வகையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும்   மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்  நுட்ப பயிற்சி பெறும் பொருட்டு வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பெரும் பொருட்டு அனுப்பி வைக்கப்படுவர்", என்று புரட்சித்  தலைவி அம்மா அவர்கள் 23.8.2016 அன்று சட்டப்பேரவையில் சட்டப்பேரவை  விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்கள்.

அந்த வகையில் 2016 - 17 மற்றும் 2017 - 18 கல்வியாண்டுகளில் 191 மாணாக்கர்கள், 15 நாட்களுக்கு ஸ்பெயின், தைவான், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயிலகங்களில், தொழில்நுட்ப பயிற்சி பெற அனுப்பி வைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிக்காக, ஆண்டொன்றிற்கு 100 மாணாக்கர்களுக்கு 1.5 கோடி ரூபாய் அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. இந்த பயிற்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள  7 கல்வி நிறுவனங்களில் தொழில் நுட்பக் கல்வித்தர மேம்பாட்டுத் திட்டம் - III மூலம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டு  அக்கல்வி நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு உதவிகள் காரணமாக தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகமாகும். 2017-18ஆம் ஆண்டில் பி.எச்டி ஆராய்ச்சி படிப்பில் 29778 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கான செயல்திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, டி. ஜெயகுமார், கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பா. பென்ஜமின், நீலோபர் கபில், எம். மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு செயலாளர்கள், தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Label