OUR CLIENTS
பஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா? அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா?
பஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா? அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா? Posted on 12-Sep-2018 பஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்க வழியுண்டா? அரசு நடவடிக்கை எடுக்குமா& அப்படியே விட்டுவிடுமா?

வேலூர், செப். 12-

பஞ்சமி நிலம் பறிபோனது மீண்டும் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் பலர் இருந்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக பஞ்சமி நில மீட்பில் முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இறுதிகட்டத்தை நெருங்கியும் அதை கிடப்பிலேயே வைத்திருக்கிறது பஞ்சமி நில மீட்புக்கான மத்திய குழு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் அடித்தட்டில் இருக்கும் பட்டியலின மக்களின் தரத்தை உயர்த்த நில உரிமை அத்தியாவசியமாகிறது.

இதே காரணத்தால் பிரிட்டிஷ் ஆட்சி காலத்து ஆட்சியர் ஜேம்ஸ் டிரெமென்கீர் என்பவரின் முயற்சியிலும் சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு முன்னெடுப்புகளாலும் பட்டியலின மக்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. சேரிநத்தம், வெட்டியான்மானியம், பூமிதானம், ஜமீன் ஒழிப்பு உள்ளிட்ட 14 வகையான நிபந்தனைக்குட்பட்ட இத்தகைய நிலங்களை வருவாய் நிலையாணை 15/41 நிலப்பாதுகாப்பு விதிகளை மீறி எஸ்.இ./எஸ்.டி. அல்லாதோர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் துணையோடு அபகரித்துள்ளனர். சுமார் 12 லட்சம் ஏக்கருக்கும் மேல் அபகரிக்கப்பட்ட பஞ்சி நிலத்தை மீட்ககோரி உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடந்தது. நிலத்தை இழந்தவர்களுக்கே மீண்டும் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கியும், அரசு தரப்பு இதனை மெத்தனமாகவே கையாண்டது. இந்நிலையில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் பஞ்சமி நிலமீட்புக்கான மத்தியக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நாகர் சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு ஆகஸ்ட் 12, 2015 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதில் தலைமைச் செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முதன்மைச் செயலர் அடங்கிய பஞ்சமர் நிலமீட்பு மத்தியக் குழுவை பஞ்சமி நிலங்களை மீட்டு அதிகபட்சமாக ஆறுவார காலத்துக்குள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் அரசாணை நிலை எண் 357ன் கீழ் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழுவின் தலைவராக நிலநிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதனையும், அதிதிராவிடர் செயலாளர் மற்றும் அரசு வருவாய் செயலாளரை உறுப்பினர்களாகவும் நியமித்து ஆணை பிறப்பித்தார்.

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பட்டியலின மக்கள் தவிர வேறு யாருக்கும் விற்கவோ தானமாக வழங்கவோ முடியாது. அதற்கு முற்பட்டால் பத்திரப்பதிவு அதிகாரி பத்திரப்பதிவு செய்யக்கூடாது. அதையும் மீறினால் எந்தக் காலத்திலும் எந்த நஷ்டஈடும் இன்றி நிலத்தை வாங்கியவரிடம் இருந்து அரசு பறிமுதல் செய்யலாம் என்பது விதி. இந்த விதிகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்க 1994ல் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. செங்கல்பட்டில் குழிப்பான், தண்டலம் ஏழுமலை, பாப்புநல்லூர் ஜான்தாமஸ் உள்ளிட்டோர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஞ்சமர் நிலமீட்பில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நாகர்சேனை தலைவர் அருங்குணம் விநாயகம், டிசம்பர் 12, 2011ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அகலி, சிறுநல்லூர், முதுகரை, ஒரத்தூர் பகுதிகளில் இருக்கும் பஞ்சமி நிலங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பட்டியலின மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தருவதில் அரசுகளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. 
காலதாமதத்தை சுட்டிக்காட்டி  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தபோது கடந்த மே 26ல் குறைந்தது 2 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு ஜூலை 15க்குள் மக்களிடம் ஒப்படைப்போம் என உறுதியளித்தது பஞ்சமி நிலமீட்புக்குழு. இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் அளித்த உறுதியையும் பஞ்சமர் நிலமீட்பு மத்தியக்குழு மறந்துவிட்டது. முன்னாள் முதல்வரும், பிரதமரும் மறைந்த காரணத்தால் பணியைத் தொடர முடியவில்லை, இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம் என்கிறார் ஓட்டம் டைய். இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லியுள்ளார் வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா.நில நிர்வாக ஆணையர் ஜெயக்கொடி இதைப்பற்றி பேச மறுத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பஞ்சமி நில மீட்பு என்பது சமூகத்தில் நலிவடைந்த பட்டியலின மக்களை நில உரிமையின் மூலம் பாதுகாக்கும் பெரும்பணியாகும் ஆனால் அதைப்பற்றிய எந்தவித கவலையும் இல்லாத அரசு மற்றும் அதிகாரிகளால் அது இன்னமும் கானல் நீராகவே இருக்கிறது. இல்லாத பாமரர்கள் இல்லாமல் சொந்த மண்ணிலேயே மண்ணின் மைந்தர்கள் மண் இன்றி சிரமத்துக்கு உள்ளாகி அநாதையாக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. இதை எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசாவது கையில் எடுத்து பணியை துரிதப்படுத்தி முடித்து பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து பலமாக எழ ஆரம்பித்துள்ளது. பஞ்சமி நிலங்களை அரசு மீட்கப் போகிறதா அல்லது கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறதா என்பதையும், அரசின் நடவடிக்கை அதிரடியாக தொடருமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label