OUR CLIENTS
அதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக!
அதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக! Posted on 14-Sep-2018 அதிமுகவுடன் அனுசரித்து போகும் விழுப்புரம் மாவட்ட திமுக!

விழுப்புரம், செப். 14-

விழுப்புரம் மாவட்ட திமுகவினர் அதிமுகவுடன் அனுசரித்து போகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலை விழுப்புரம் மாவட்டத்தில் நிலவுவது திமுக தலைமைக்கு தெரியுமா? என்பதே விடை தெரியாத மர்மமாக உள்ளது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு திமுக நடத்தும் முதல் முப்பெரும் விழா விழுப்புரத்தில் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில் தங்கள் மாவட்டத்தில் தலைகீழ் மாற்றங்களை கட்சித்தலைவர் உண்டாக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் விழுப்புரம் மாவட்ட உடன்பிறப்புகள். வடமாவட்டங்களில் மிகப்பெரியது விழுப்புரம் மாவட்டம். அதாவது மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7 தொகுதிகளை கடந்த தேர்தலில் திமுக வென்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என்று மூன்றாக பிரித்து வைத்துள்ளது திமுக. வடக்க மாவட்ட செயலாளராக செஞ்சி எம்எல்ஏ மஸ்தானும், தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அங்கையற்கண்ணியும், மத்திய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், இந்நாள் திருக்கோயிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடி உள்ளார். 

செஞ்சி மஸ்தான் படிப்படியாக வாழ்வில் முன்னேறியவர். செஞ்சி பேரூராட்சியின் தலைவராக 5 முறை வென்றவர். திமுக எம்எல்ஏ ஆனதும் திமுகவினரை திரும்பி கூட பார்க்கவில்லை. மாறாக அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தோடும், ஆரணி தொகுதி எம்பி ஏழுமலையோடும் கைகோர்த்து கொண்டு அரசியல் நாகரிகம் இல்லாமல் பல பணிகளை சாதித்து கொண்டுள்ளார் என்று செஞ்சியில் உள்ள திமுக உடன்பிறப்புகள் சொல்லி புலம்புகின்றனர். பல சிபாரிசு கடிதங்களை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கொடுத்து அனுப்பி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

செஞ்சி மஸ்தான் இப்படி என்றால் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணிக்கு சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் தவிர யாரும் ஆதரவு தருவதில்லையாம். ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேலு, ராஜவேலு உட்பட பலரும் மாவட்ட செயலாளர் நாற்காலிக்கு தயாராகி வருகின்றனர். அங்கயற்கண்ணி செயல்படா மாவட்ட செயலாளர் என்னும் முத்திரை குத்தும் பணியைத்தான் செய்கிறார்கள். அடுத்த மாவட்ட செயலாளராக வர வேண்டும் என்று ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு பெற சுற்றி சுற்றி வருகிறார். அண்மையில் சங்கராபுரத்தில் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்வராயன்மலையில் நடந்த கோடை விழாவில் கலந்து கொண்ட சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் அமைச்சர்களை புகழ்ந்து பேசியதோடு அதிமுக மாவட்ட செயலாளர் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுடன் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சில பல சலுகைகளை பெற்றதாக தொகுதி முழுவதும் தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இவரும் அதிமுகவிடம் சரண்டர் அடைந்து விட்டார்.

மத்திய மாவட்டத்தில் பொன்முடி மாவட்ட செயலாளராக உள்ளார். மக்கள் பிரச்னை, திமுகவினர் சிபாரிசு கேட்டால் லெட்டர் பேடில் எழுதி கொடுத்து விடுகிறாராம். அதனால் யாருக்கும் பயனில்லை என்று சொல்லப்படுகிறது. கட்சி தலைமையுடன் நெருக்கமாக உள்ள பொன்முடி மாவட்ட செயலாளர் பதவியை விட்டு விட்டு தலைமை கழக பதவிக்கு போகவேண்டியதுதானே என்கின்றனர் விழுப்புரம் நகர திமுக உடன்பிறப்புகள். இதிலிருந்து விழுப்புரம் மாவட்ட திமுக அதிமுகவிடம் சரண்டர் ஆனது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. இவர்களை வைத்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label