OUR CLIENTS
புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்!
புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்! Posted on 14-Sep-2018 புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்!

புதுச்சேரி, செப். 14-

புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக, முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் அறிவித்துள்ளார்.

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் 100 அடி சாலையில் உள்ள ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் நேற்றுமுன்தினம்  மாலை ஆலோசனை நடத்தினார். பின், புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

கண்ணன் கூறியதாவது:புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சியை விரைவில் தொடங்க உள்ளேன். தேர்தல் கமிஷனை அணுகி, கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் ஒரு சில தினங்களில் தொடங்கப்பபட உள்ளது. தேர்தல் கமிஷனில் பதிவு செய்த பின், கட்சியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்தேன். மக்களின் கஷ்டங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்த்தேன். குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டு இருக்காமல், விலையை குறைப்பதற்கு, முதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும் முயற்சி எடுக்கலாம்.

சில மாநிலங்களில் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எல்லா பொருட்களின் விலையும் ஏறிக் கொண்டுள்ளன. எனவே, மத்திய பா.ஜ., அரசும், மாநில காங்., அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதுச்சேரியில் மணல் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் படும் அவதியை பற்றி சிந்திக்காமல் இருப்பது, எந்த அரசாக இருந்தாலும் தவறு. ‘மக்களுக்காக நாங்கள்... மக்களோடு நாங்கள்...’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மக்களுக்காக ஓங்கி குரல் கொடுப்பதற்காகதான் இப்போது வந்துள்ளோம்.

மின்சாரத்துக்கு 250 ரூபாய் கட்டினோம்; இப்போது, 950 ரூபாய்க்கு பில் வருகிறது என்கின்றனர். மக்களால் எப்படி கட்ட முடியும்? இங்கு நல்ல தண்ணீர் கிடைக்கும்; கட்டணம் குறைவாக இருக்கும் என்பது புதுச்சேரியின் பெருமையாக இருந்தது. அதற்கும் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். குப்பைக்கும் வரி வாங்கும் வேதனையான அரசு இதுதான். குப்பைக்கும் வரி, நடப்பதற்கும் வரி, நிற்பதற்கும் வரி என்றால் மக்கள் என்ன செய்வர்?

புதுச்சேரியில் இருந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தற்போது, வியாபாரமும் படுத்து விட்டது. நூற்பாலையை மூடிவிட்டு, தாரைவார்க்க பேசிக் கொண்டுள்ளனர். சர்க்கரை ஆலையையும் மூடி விட்டனர். ரோடியர் மில்லை திறக்க முடியாது என சவால்விட்ட நேரத்தில், அந்த மில்லை திறக்க முடியாவிட்டால் சட்டசபைக்குள் நுழைய மாட்டேன் என அறிவித்து, ரோடியர் மில்லை திறந்து காட்டினேன். தார்மீக பொறுப்பு யாருக்கும் இல்லையே? அதற்காகத்தான் தற்போது மீண்டும் வந்துள்ளோம்.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்றனர். ஊருக்கு ஒருவருக்காவது வேலை தந்தார்களா? அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும்தான் நாங்கள் கட்சியை ஆரம்பித்துள்ளோம்.இவ்வாறு, ப.கண்ணன் கூறினார்.

Label