OUR CLIENTS
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உத்தரவாதம்
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உத்தரவாதம் Posted on 14-Sep-2018 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை  நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு உத்தரவாதம்

சென்னை, செப்.14-
சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கான வழித்தடத்தின் அகலத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

தற்போதைய நிலையில் நெடுஞ்சாலை சட்டம் 3ஏ பணிகளை, அதாவது பொது மக்களிடம் கருத்து கேட்பது, சுற்றுச்சூழல் மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யபட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.  அந்த பணிகளை நிறைவு செய்யாத நிலையில் நில எடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்றும் நீதிபதிகள் வினவினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், திட்டத்தை இறுதி செய்யும் வரை நில எடுப்பு நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்தார். இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதனிடையே, சென்னை-சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Label