OUR CLIENTS
கூட்டுறவு வங்கி கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டுகோள்
கூட்டுறவு வங்கி கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டுகோள் Posted on 19-Sep-2018 கூட்டுறவு வங்கி கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டுகோள்

சென்னை, செப். 19-
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதற்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி அந்த வங்கிகளின் பணியாளர்கள் கடன் வழங்க மறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான முதலீடு அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் தமிழக அரசின் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளின் கடன் வழங்கல் விதிகள் மாற்றப்படவில்லை. இதனால் வணிக வங்கிகளுடன் ஒப்பிடும் போது கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் கடன் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அதேநேரத்தில் வட்டி மிகவும் அதிகமாக இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு தான் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அரசு அனுமதிக்க வேண்டும்; பயிர் கடன் பெறும் விவசாயிகள் கடன் தொகையில் 30 விழுக்காட்டுக்கு உரம் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும்; சிறு வணிக கடன் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் கடன் மறுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலமே இருண்டு விடும் ஆபத்து உள்ளது. தமிழ்நாடு முழுவதும், 4,645 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் 75 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தான் கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள்.

ஆனால், வணிக வங்கிகள் எந்த ஆவணமும் இல்லாமல் 4 சதவீதம் வட்டியில் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் ஓர் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.32,000 மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதற்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் தொகை குறைவாகவும், வட்டி அதிகமாகவும் இருந்தால் உழவர்கள் கூட்டுறவு வங்கிகளை நோக்கி எப்படி வருவார்கள்? அவர்கள் படிப்படியாக வணிக வங்கிகளுக்கு மாறிச் செல்கின்றனர்.

இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க எவருமே முன்வர மாட்டார்கள். கூட்டுறவு வங்கிகளுக்கு மூடு விழா நடத்த வேண்டியிருக்கும். கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தால் உழவர்கள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்திலும், சம்பா பயிருக்கு மேல் உரம் வைக்க வேண்டிய நேரத்திலும் இந்தப் போராட்டம் நீடிப்பது பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, கூட்டுறவு வங்கி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label