OUR CLIENTS
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை: தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா கண்டனம்
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை: தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா கண்டனம் Posted on 24-Aug-2016 வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை: தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா கண்டனம்

டோக்கியோ:
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.


அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா ராணுவத்துடன் தென்கொரியா ராணுவத்தினர் ஆண்டுதோறும் நடத்தும்  கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தென்கொரியா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை மிரட்டலும் விடுத்திருந்தது.

வடகொரியாவின் இறையாண்மையை மீறும் வகையிலும் எங்கள் படைகளை ஆத்திரமூட்டும் முறையிலும் எங்கள் நாட்டை ஒட்டிய கடல் எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டால், இந்த பயிற்சியில் ஈடுபடும் அனைவரையும் சாம்பலாக்கி விடுவோம் என வடகொரியா நாட்டின் ராணுவ தலைமையகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கூட்டுப்போர் பயிற்சியை தென்கொரியா நேற்று முன்தினம் தொடங்கியது. தென்கொரியா வீரர்கள் சுமார் 50 ஆயிரம் பேரும், அமெரிக்க வீரர்களில் சுமார் 25 ஆயிரம் பேரும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் 2-ம் தேதிவரை நடைபெறும் இந்த போர் பயிற்சிக்கு அச்சுறுத்தலாக வடகொரியா ஏதாவது வாலாட்டினால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரிய ராணுவமும், அமெரிக்க படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தென்கொரியா நாட்டின் ராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதைப் போன்ற ஒரு பதற்றநிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா இன்று பரிசோதித்தது. இந்த அடாவடித்தனத்துக்கு தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. வடகொரியாவின் இந்த அத்துமீறலை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது என இந்நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் அறிக்கை விட்டுள்ளனர்.

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவை ஆத்திரம் ஊட்டும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்ட்டகான் எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அந்நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அதிகரிக்கச் செய்யும் என குறிப்பிட்டுள்ள பென்ட்டகான் செய்தி தொடர்பாளர் கேரி ராஸ், இவ்வகையிலான அச்சுறுத்தல்களில் இருந்து தங்களது நேசநாடுகளான வடகொரியா, ஜப்பான் ஆகியவற்றை பாதுகாப்பதுடன் தங்களையும் தற்காத்துக் கொள்ளும் திறன் அமெரிக்காவுக்கு இருப்பதாக ராஸ் குறிப்பிட்டுள்ளார்.

Label