OUR CLIENTS
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் முடங்கிவிட்ட தொழில்கள் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் முடங்கிவிட்ட தொழில்கள் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு Posted on 21-Sep-2018 பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் முடங்கிவிட்ட தொழில்கள் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

திருப்பூர், செப். 21-
மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசினார். பின்னர் தாராபுரம் மற்றும் எல்லப்பாளையத்தில் அரச மரத்தடியில் அமர்ந்து கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து காங்கேயம், பல்லடம், வீரபாண்டி, திருப்பூர் சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி கமல்ஹாசன் பேசினார். இறுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை கண்டிருக்கிறது. பணமதிப் பிழப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட மும்முனை தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளது. சினிமாத் துறையும் இதில் பாதிக்கப்பட்டது. அதற்கான கடுமையான குரலை நானும் எழுப்பியிருக்கிறேன். உங்களுக்கான உரிமையை நீங்கள் கேட்டுபெறுங்கள் அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தின் தொழில் துறை மற்ற மாநிலங்களை நோக்கி செல்கிறதென்றால் அதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இழந்தபின்பு ஆறுதல் தெரிவிப்பதை விடுத்து இழப்பு ஏற்படும் முன் அதனை சரிசெய்ய கவனம் செலுத்தவில்லை. மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் பல குறைகளை தெரிவித்திருக்கின்றனர் . அவற்றை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டும்.

தமிழக வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மக்கள் நீதி மய்யம் செயல் திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதனை தொழில் துறையோடு கலந்து பேசி செயல்படுத்த முனைப்பு காட்டுவோம். மக்கள் நீதி மய்யத்தின் ஸ்லோகமான ‘நாளை நமது’ என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் எங்களுக்கான பலம் அதிகமாக இருப்பதை உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் பேசியதாவது:- கிராமங்கள் தான் நகரங்களுக்கு உணவு அளிப்பவர்கள். எல்லாம் செய்தது போல சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை நாம் தான் ஒழிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்கள் அனைவரும் இணைந்து செய்ய வேண்டும். படித்த இளைஞர்கள் கிராமம் நோக்கி நகர வேண்டும். நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் விரைவில் வரும். முன்னேற்றங்கள் கிராமத்தை நோக்கி நகர வேண்டும். நல்லது எல்லாம் ஒன்று கூட ஆரம்பித்து விட்டது. அது தான் நாம் ஒன்று சேர்ந்திருப்பது.

கிராமசபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி செல்கிறேன். கிராம சபை கூட்டங்கள் புதைக்கப்பட்டுள்ளது. அதை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்றத்துக்கு இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமலே மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் நலனுக்காக கேள்விகளை கேட்டது. யார் தடுத்தாலும் தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். என்னைப் பல இடங்களில் நான் மக்கள் முன் பேசுவதற்கு பல தடைகளை இடுகின்றனர். நாம் சந்தித்து பேசி விடப்போகிறோம் என்ற பயத்தில் நான் பேசப்போகும் இடங்களை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர்.

கல்வியை தாங்கிபிடிக்க வேண்டிய அரசு அதை விடுத்து மதுக்கடைகளை தாங்கி நிற்கிறது. இளைஞர்கள் அனைவரையும் நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை. வருங்கால முதலாளிகளாக தான் பார்க்கிறேன். எனக்கு தெரியும் முதலாளிகளை எங்கு வைக்க வேண்டும், திருடர்களை எங்கு வைக்க வேண்டும் என்று. இது மின்னல் போல் வந்து மறைந்து செல்லும் பயணம் அல்ல. இது தொடரும். பல்வேறு இடையூறுகளிடையே காவல்துறையினர் நமக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். காவல்துறையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் பணிக்கு நாம் இடையூறு செய்ய அளிக்க கூடாது. நமது இயக்கம் கட்டுப்பாடு நிறைந்த இயக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Label