OUR CLIENTS
வார ராசிபலன்
வார ராசிபலன் Posted on 24-Sep-2018 வார ராசிபலன்

மேஷம்
வாரம் முழுவதும் தன நாதன் சுக்கிரன் பாக்கியாதிபதி குருவுடன் இணைந்து ராசியைப் பார்ப்பது மே‌ஷத்திற்கு நல்ல பலன்களை கொடுக்கும் நிலை என்பதால் இது உங்களுக்கு பண வரவுகளை தரும் வாரமாக இருக்கும். பணம் என்பது வேலை, தொழில், வியாபாரம் மூலம் சம்பாதிக்க கூடியது என்பதால் இதுவரை மேற்கண்ட ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்காதவர்கள் மாற்றங்களை சந்தித்து நன்மைகளை பெறுவீர்கள். உங்களில் ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும்.
மே‌ஷராசிக்கு பூர்வ புண்ணிய பலத்தினால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோ‌ஷமான நிகழ்வுகள் இருக்கும். உங்களின் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களில் சிலர் வேலையில் சாதனை செய்து நல்லபெயர் எடுப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

ரிஷபம்
உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தருபவரான புதன் உச்ச நிலையை அடைவதாலும், ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதாலும் இது ரி‌ஷப ராசிக்காரர்களுக்கு யோகம் தரும் வாரம். புதனின் உச்சபலத்தால் அறிவுசார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மற்றும் புத்தியை மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் உண்டு. சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும்.
புதனின் பலத்தால் லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம். பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற வி‌ஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

மிதுனம்
ராசிநாதன் புதன் ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு ஒருமுறை அடையும் உச்ச வலிமையை அடைந்திருப்பதால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் செயல்படும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு புதனின் உச்ச நிலை நீடிக்கும் என்பதால் தயங்கி கொண்டிருந்த அனைத்தையும் சந்தித்து நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. ஐந்தில் சுக்கிரன் ஸ்தம்பன நிலையில் ஆட்சியாக உள்ளதும் மிதுனத்திற்கு கை கொடுக்கும் சிறப்பான அமைப்பு. இன்னும் சில வாரங்களுக்கு நீங்கள் எதையும் துணிந்து செய்யலாம்.
உங்களில் சிலருக்கு அதிகாரப் பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு. வேலை, வியாபாரம் சொந்த தொழில் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். சமீபத்தில் திருமணமானவர்கள் மனைவிக்கு அவர் ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு பொருளை வாங்கித் தருவீர்கள்.

கடகம்
வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் எட்டில் இருப்பதால் வாரத்தின் முதல் நாள் மட்டும் நீங்கள் தட்டுத் தடுமாறுவீர்கள். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உறவுப்பெண்கள் வி‌ஷயத்தில் கோபமூட்டும் வி‌ஷயங்கள் நடக்கும் என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. அலுவலகங்களில் பொறாமை மற்றும் துரோகத்தால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு தடைகள் நீங்குவதால் இனிமேல் நிலையான வருமானம் வரத் துவங்கும்.
உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல வி‌ஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

சிம்மம்
வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமமாக அமைவதால் செவ்வாய், புதன் இரண்டு நாட்களும் எதிலும் குழப்பமாக இருப்பீர்கள். மீதி நாட்கள் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கொடுக்காத வாரம் இது. குறிப்பாக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வி‌ஷயம் நிறைவேறும். பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே உண்டு என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.
உங்களுடைய தடாலடி நடவடிக்கைகளால் உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில்களில் இடையூறுகள் இல்லாமல் சகஜமாகவே செல்லும். 28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். இன்று மாலை 5.15 மணி முதல் 27ந்தேதி அதிகாலை 1.54 மணிவரை சந்திராஷ்டமம் என்பதால், நீண்டதூர பிரயாணங்கள், புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

கன்னி
வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் உச்ச அமைப்பு பெறுவதால், கன்னி ராசியை சந்தோ‌ஷத்தின் உச்சியில் இருக்கும் வைக்கும் வாரம் இது. உங்களில் சிலர் வீட்டிலோ, அலுவலங்களிலோ நல்லபெயர் எடுப்பீர்கள். இன்னும் சிலர் செயற்கரிய செயல் அல்லது சாதனைகளை செய்வீர்கள். கன்னியை அடுத்தவர்கள் மெச்சும் வாரம் இது. சுக்கிரனும் யோகநிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நீண்டகாலமாக நீங்கள் நினைத்திருந்த வி‌ஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம்.
பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் வரும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். 25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 27ந்தேதி அதிகாலை 1.54 மணி முதல் 29ந்தேதி காலை 8.26 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் எதையும் செய்ய வேண்டாம்.

துலாம்
எல்லாத் துறையைச் சேர்ந்த துலாம் ராசியினருக்கும் நல்லவாரம் இது. புதன் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருக்கிறார். யோகாதிபதி சனி மூன்றில் இருக்கிறார். இப்போது விட்டால் எப்போதுமே கிடைக்காத கோட்சார யோக அமைப்பு இந்த வாரம் இருக்கிறது. துணிந்து எதிலும் இறங்குங்கள். வெற்றியும் நன்மையையும் மட்டுமே கிடைக்கும். இதுவரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உங்களை பரம்பொருள் கண்கொண்டு பார்க்கும் வாரம் இது.
பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடக்கும் துலாத்தினர் இந்தவாரம் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள். கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் எல்லாம் கைகூடும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. 24,26, ஆகிய நாட்களில் பணம் வரும். 29ந்தேதி  சந்திராஷ்டம நாள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

விருச்சிகம்
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இதுபோன்ற சங்கடமான நிலைகளையும், சோதனைகளையும் சந்தித்துக் கொண்டே இருப்பது என்று தன்னம்பிக்கை இழந்திருந்த விருச்சிகத்தினர் துயரங்களில் இருந்து மீண்டு வரும் வாரம் இது. சோதனைகளும், வேதனைகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குத்தான் என்பதால் அக்டோபர் குருப் பெயர்ச்சியை மனதில் நிறுத்தி விருச்சிகத்தினர் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உண்மையில் ஏழரைச்சனியால் விருச்சிகம் பட்ட கஷ்டம் அதிகம்தான். இனிமேல் பயப்பட ஒன்றும் இல்லை.
கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் வி‌ஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனி இருக்காது. சுக்கிரனின் வலுவால் இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனதிற்குள் காதலிக்க ஆரம்பித்து மயக்கத்தில் இருப்பீர்கள். நல்ல எதிர்காலத்திற்கான ஆரம்ப வாரம் இது.

தனுசு
மூலம் நட்சத்திரத்தில் தற்போது சனி சென்று கொண்டிருப்பதால், தனுசு ராசி இளைய பருவத்தினர் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து குடும்பத்திலும் கலக்கங்கள் இருக்கின்றன. ஜென்மச்சனியின் தாக்கத்தால் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். அழ வேண்டும் போலவும் இருக்கும். அலுவலகங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்களையும் சந்திப்பீர்கள். உங்களை பிடிக்காத சிலர் பின்னால் செய்யும் வேலைகளால் குழப்பம் வரும் வாரம் இது.
தனுசு ராசி பெரியவர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் இருக்காது. அவர்களுக்கு இந்த பலன் பொருந் தாது. எட்டில் ராகு இருப்பதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. கணவன்-மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. எதிலும் வீண் சண்டை வேண்டாம். கோபத்தில் ஏதாவது சொல்லி அது சண்டையாகும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. ஏழாம் அதிபதி சந்திரன் பலவீனமான அமைப்பில் இருப்பதால் கணவன்மனைவிக்குள் மூன்றாவது நபரின் தலையீட்டினாலோ, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத நிலையினாலோ கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ராசியில் செவ்வாய், கேது இருப்பதால் சிலர் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள்.
உங்களில் சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக் கலக்கங்கள் இருக்கும். நண்பர்கள் பங்குதாரர்கள் வி‌ஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற வி‌ஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது.

கும்பம்
அஷ்டமாதிபதி புதன் உச்சம் என்கிற சுபத்துவ நிலை அடைவதால் இந்த வாரம் கும்பத்தினருக்கு தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வருவதும், நீங்களே வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு பயணப்படுவது அல்லது அவற்றின் மூலமான நன்மைகளை பெறுகின்ற வாரமாக இது இருக்கும். ஒரு குறிப்பிட்ட பலனாக பருவவயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். காதல் போன்ற வயதுக்கேற்ற வி‌ஷயங்கள் இப்போது உங்கள் காதுக்கு வரும்.
வேலை செய்யும் இடங் களில் அனாவசியமாக எவரையும் பகைத்துகொள்ள வேண்டாம். சிலருக்கு விரும்பிய வேலை பற்றிய தகவல் கள் வந்து சேரும். வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையால் மருத்துவச்செலவுகள் இருக்கும். பொதுவில் இந்த வாரம் நல்ல வாரமே.

மீனம்
கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாரம் மீனத்தினர் ஆன்மிக வி‌ஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். உங்களில் சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சம்பவங்களும், ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். ராசியை ஒரு உச்ச கிரகம் பார்ப்பதால் மனதிற்கு சந்தோ‌ஷமான வி‌ஷயங்கள் இந்த வாரம் உண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் ராசிநாதன் ராசியைப் பார்க்கப் போவதால் மீனத்திற்கு இனி எல்லாம் வெற்றிதான்.
அரசு தனியார் ஊழியருக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். உங்களில் உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் வெகுநாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். மீனத்தின் சந்தோ‌ஷ வாரம் இது.

Label