OUR CLIENTS
அறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்!- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு?
அறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்!- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு? Posted on 24-Sep-2018 அறுவை சிகிச்சை என்ற பெயரில் திருவலத்தில் சிறுவன் உயிருடன் விளையாடிய அரசு மருத்துவர்!- கொலையை மறைக்க ரூ.20 லட்சம் செலவு?

வேலூர், செப். 24-

திருவலத்தில் உயிருடன் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறி கொலை செய்துள்ளார் அரசு மருத்துவர். உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய அறுவை சிகிச்சை அரங்கம் இல்லாமல் அறுத்துவிட்டு சிறுவன் இறந்ததால் இதை மறைக்க ரூ.20 லட்சம் பேரம் பேசி கொடுத்து விட்டு வழக்கில் இருந்து தப்பித்துள்ளார் அரசு மருத்துவர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது திருவலம். திருவலத்தில் ஜீவன் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார் அச்சுதானந்தன். இவர் தற்போது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் வாலாஜா அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திருவலத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இப்போதுதான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கிளினிக்குக்கு திருவலம் பகுதி அடுத்துள்ள கார்ணாம்பட்டு அருகேயுள்ள ஆழ்வார் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெல் நிறுவனத்துக்கு உப பொருட்களை உற்பத்தி செய்து தரும் தேவன் என்பவரின் மகன் கிரண்குமார் என்ற மாணவன் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன்படி கடந்த 14ம் தேதி கிரண்குமாருக்கு வயிற்று வலி அதிகமானதாம். மாணவன் வலியால் அலறி துடித்துள்ளார். அம்மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர் அச்சுதானந்தன் கிரண்குமாருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். இதனால் கிரண்குமாரின் பெற்றோர்களும் அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மருத்துவர் அச்சுதானந்தன் அந்த மாணவனுக்கு எவ்வித உபகரணங்களும் இல்லாமல் திறந்த வெளியில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அந்த மாணவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மாணவனை தனது காரில் தூக்கி கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள  கே.எச்.அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுவன் இறந்து ஒரு மணி நேரம் ஆவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதேகாரில் சிறுவன் உடலை கொண்டு வந்துள்ளார் அச்சுதானந்தன். மருத்துவர் அச்சுதானந்தன் காரை பின்தொடர்ந்து மற்றொரு கார் வந்துள்ளது. 

இதற்கிடையே மகனை காணாமல் அவனது பெற்றோர்கள் பதட்டம் அடைந்தனர். இதற்கிடையே கார்ணாம்பட்டு அடுத்த குளம் பேருந்து நிறுத்தம் அருகே காரை நிறுத்தி விட்டு மருத்துவர் அச்சுதானந்தன் பின்னால் வந்த காரில் ஏறி தப்பி ஆந்திர மாநிலம் சித்தூரில் சென்று தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அந்த காரின் பின் இருக்கையில் இறந்த சிறுவனின் உடல் இருந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் இறந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. சிறுவனின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸ், காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர் அச்சுதானந்தனை கைது செய்வதாக உறுதியளித்தனர். சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது. சிறுவன் உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக காவல் துறையினர் 347/சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்த தப்பிக்க மருத்துவர் அச்சுதானந்தன் தரப்பினர் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளனர். அதாவது இறந்த சிறுவன் கிரண்குமார் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர். காவல் துறையினருக்கு ரூ.5 லட்சம், உள்ளூர் செய்தியாளர்களுக்கு
ரூ.2 லட்சம், அரசியல் பிரமுகர்களுக்கு ரூ.3 லட்சம் கொடுத்து வாய்முட்டு போடப்பட்டதாக சமூக ஆர்வலர்களும், இந்தப்பகுதி வாழ் பொதுமக்களும் கதை கதையாக கூறுகின்றனர்.  எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்ற நோக்கில் இத்தனை பேரும் நடந்து கொண்டுள்ளனர். இதில் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அரசு மருத்துவர்கள் அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு  கன்சல்டிங் என்ற பெயரில் சுயமாக கிளினிக் நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கிளினிக்குக்கு வரச் சொல்லி திசை திருப்பி விடும் வேலையில் பல மருத்துவர்கள் தைரியமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்கள் கிளினிக் நடத்தக் கூடாது என்று சட்டம் போட்டாலும் அதை மதிப்பது இல்லை. அரசு ஆசிரியர்களும் டியூஷன் எடுக்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதையும் மீறி சிறப்பு வகுப்பு என்ற பெயரில் டியூஷன் எடுத்து ஆயிரங்களை வாங்கி குவிக்கின்றனர். 

அரசு மருத்துவர்கள் சில மணி நேரங்களிலேயே அரசு மருத்துவமனைகளில் பணியாற்று கின்றனர். உடனே சொந்த கிளினிக்குக்கு சென்று விடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது. அரசு மருத்துவர்களுக்கு அரசு மூக்கணாங்கயிற்றை இறுக்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இப்படி பேரம் பேசி பணம் கொடுத்து விட்டால் வழக்கு மூடி மறைக்கப்பட்டு விடுமா? இதுபோன்ற மருத்துவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி அப்பாவி மாணவனை கொலை செய்த அரசு மருத்துவர் அச்சுதானந்தனுக்கு குறைந்தபட்சம் ஆயுள்தண்டனையாவது பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் மருத்துவர் தான் தப்பித்து கொள்ள அனைத்து முயற்சிகளையும் குறுக்கு வழியில் எடுத்து வருவது மட்டும் வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாரா? அல்லது ‘ப’ வைட்டமின் கொடுத்து விட்டு சட்டத்தின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பி விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label