OUR CLIENTS
வேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா?
வேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா? Posted on 24-Sep-2018 வேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் எழுச்சி குறையக் காரணம் புதியவர்களா?

வேலூர், செப். 24-

வேலூர் மாவட்டத்தில் பாமகவின் பலம் , எழுச்சி குறையக் காரணம் புதியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாலா என்று பாமகவில் புதிய பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. இதை பாமக தலைமை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளும், பாமக தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர். 

திரைப்பட நடிகர்களை அழைத்து மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கியுள்ளதால் பாமக மீது பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். திரைப்பட நடிகர்களை கூத்தாடிகள் என்று விமர்சனம் செய்து வந்தார். அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துள்ள ரசிகர்களையும் கடும் விமர்சனம் செய்து வந்தார் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ். இந்நிலையில் தனது கட்சியிலேயே திரைப்பட நடிகர் ரஞ்சித்தை இணைத்து அவருக்கு மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது பாமக என்றால் நம்ப முடியவில்லை. அத்துடன் நேற்று முன் தினம் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதையடுத்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகேயும் விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இறுதியாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் ‘பாலாற்றை காப்போம், கரம் கோர்ப்போம்’ என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.

 இதில் பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். ஆனால் கடந்த காலங்களில் பாமகவுக்கு இருந்த எழுச்சி வேலூர் மாவட்டத்தில் குறைந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் இருந்து கொண்டு டெல்லியை ஆட்டிப் படைக்கும் சக்திவாய்ந்த கட்சியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. பாமக யாருடன் இருக்கிறதோ அவர்கள் வெற்றிவாகை சூடி ஆட்சியை கைப்பற்றுவர். இந்நிலைக்கு காரணம் அப்போது பாமகவில் இருந்தவர்கள் எல்லாம் கட்சிக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவர்கள். விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களும் உள்ளனர். இத்துடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவர் ச.ராமதாஸ் வீரவணக்கம் செலுத்தி வருவதும் வரலாறு ஆகும். ஆனால் இன்று பாமகவில் உள்ளவர்கள் அப்படி அதிதீவிரமாக செயல்படவில்லை. 

கட்சியில் பொறுப்புக்கு மட்டும்தான் மல்லுகட்டுகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பாமகவினர் யார் யாருக்கெல்லாம் பொறுப்பு வழங்குவது என்று தெரியாமல் பாமக தலைமை பொறுப்புகளை வாரி வழங்கியுள்ளது. இதனால் எழுச்சி குறைந்து காணப்படுகிறது. தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டங்களில் உள்ளது போன்று வேலூர் மாவட்டத்தில் நூற்றில் 50 சதவீதம் கூட எழுச்சி இல்லை என்று கூறலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் மற்றும் பிற அரசியல் கட்சியினர். இனி பாமகவின் சரிவை வேலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள புதிய நிர்வாகிகளை மாற்றி அனுபவமும், ஆற்றலும் கொண்ட வீர வன்னியர்களை பாமக தலைமை நியமிக்க வேண்டும் என்பதே பல வீர வன்னியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாமக இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமா? வேலூர் மாவட்டத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்யுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label