OUR CLIENTS
சிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்!
சிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்! Posted on 25-Sep-2018 சிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்!

வேலூர், செப். 25-

 வேலூர் சத்துவாச்சாரி பகுதி ஒன்று எண் 566-ல் டாக்டர் சந்தியா பாபு என்பவர் சந்தியா கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். வேலூர் மட்டுமல்லாது பிறமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்து கருத்தரிப்பு சம்பந்தமான மருத்துவத்துக்கு டாக்டர் சந்தியாவை நாடுகின்றனர் பொதுமக்ககள்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ரெட்டி மோனிஷா&பாலாஜி தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறுவதற்கு டாக்டர் சந்தியாவின் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இங்கு கருவூட்டல் சிகிச்சைக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர். திருமணத்திற்குப் பின் கணவர் ஊரான திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வசித்துவந்த மோனிஷா கருவூட்டல் சிகிச்சைக்காக வேலூர் சத்துவாச்சாரியிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த மார்ச் மாதம் கருவூட்டல் செய்யப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து மருத்துவப்பரிசோதனைக்குச் சென்று வந்த மோனிஷாவுக்கு கருத்தரித்து ஏழாம் மாதம், அதாவது செப்டம்பர் 20 அன்று வயிற்றுவலி என சந்தியா கருவூட்டல் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். ஏழு மாதங்களே ஆன நிலையில் மோனிஷாவுக்கு இரட்டைக்குழந்தைகள் (ஆண், பெண் என இரட்டை குழந்தைகள்) பிறந்துள்ளன. குறைமாதத்ததில் பிறந்த இக்குழந்தைகள் 550, 600 கிராம்கள் எடை மட்டுமே இருந்ததால் இங்கு வைத்து குழந்தைகளை மருத்துவம் பார்க்க முடியாது என சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி டிரஸ்ட் மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார் டாக்டர் சந்தியா.

அங்கு சென்றபோது குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளை இப்படி சாதாரணமாக துணியில் சுற்றிக் கொண்டு வந்தது மிகவும் தவறு என காஞ்சி காமகோடி டிரஸ்ட் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் குழந்தைகளின் நிலையைபார்த்த அம்மருத்துவர்கள் கருணையுடன் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். குறைமாத குழந்தைகள் என்பதால் கடுமையான நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காஞ்சி காமகோடி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததோடு குழந்தைகளுக்கு முதலுதவி அளித்தனர் மற்றும் அங்கு மருத்துவ செலவு அதிகம் என்பதால் எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் எழும்பூர் அரசு  குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மோனிஷாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாலை மோனிஷாவின் உறவினர்கள் வேலூருக்கு வந்து சந்தியா மருத்துவமனைக்கு வந்து நியாயம் கேட்டுள்ளனர். மீண்டும் நேற்று காலை சந்தியா மருத்துவமனைக்கு வந்து மோனிஷாவின் இந்த நிலைக்கு டாக்டர் சந்தியா அளித்த சிகிச்சையே காரணம் என கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். உறவினர்கள் கூட்டமாக சந்தியா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டு சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் புகழேந்தி காவலர்களுடன் வந்து அங்குள்ள சூழலை அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர் வேலூர் தாசில்தார் ரமேஷ்  விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
வேலூர் தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி அலெக்ஸ், காவல் ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் இரு தரப்பினரையும் மருத்துவமனைக்குள் வைத்து விசாரித்தார்கள். கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டனர். அத்துடன் தள்ளு முள்ளு ஏற்படும் சூழலில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்குள்ளாக மருத்துவமனைக்கு வெளியே கூட்டம் சேர பதட்டமான சூழலால் மேலும் காவலர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். 

இதுகுறித்து மோனிஷாவின் உறவினர் அசோக் கூறுகையில், இதுவரை 
ரூ.9 லட்சம் பணம் கொடுத்துள்ளோம், ஆனால் முறையாக சிகிச்சையளிக்காமல் குறை மாதத்தில் குழந்தை பிறக்கவா?. இவ்வளவு பணம் செலவு செய்துள்ளோம். இந்த பிரச்சனை குறித்து டாக்டர் சந்தியாவிடம் கேட்டோம். அதற்கு அவர் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார். இங்கு சிகிச்சை ஆரம்பித்த நாள் முதல் அவர்கள் சொல்லுவதுபோல் சிகிச்சைக்கு  ஒத்துழைத்தோம். ஆனாலும் எதுவுமே சரியாக நடக்கவில்லை. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து அனுப்பாமல் துணியில் சுற்றிக் கொடுத்து அனுப்பினார்கள். 

இங்கு சிகிச்சைக்கு என வருபவர்களிடம் லட்சங்களில் வசூலித்து விட்டு மேலும் பணம் கிடைக்குமா என்று செயல்படுகின்றனர் என்று கூறினார். துணியில் சுற்றி கொடுத்ததால்தான் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் உடல்நிலை கேள்விகுறியாக உள்ளது.
இதற்கிடையே இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு அதிகமாக அனைவரையும் தாசில்தார் அலுவலகத்துக்கு வரச்சொல்லி விட்டு ஆய்வாளர் புகழேந்தி மருத்துவர் அறையிலிருந்து வெளியேறினார்.  இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சத்துவாச்சாரி பகுதியில் சென்னை-பெங்களூரு  தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். வேலூர் டிஎஸ்பி (பொறுப்பு) அலெக்ஸ், வட்டாட்சியர் ரமேஷ், சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் புகழேந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தியுள்ளனர். 

குறைபிரசவத்தில் பிறந்த பிஞ்சுகள் குழந்தைகள் நல மையம் சென்னை எழும்பூரில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கு முன்னர் நடந்த கதையை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும். சந்தியா கருத்தரிப்பு மையத்தில் இந்த தம்பதி குழந்தை வேண்டி ரூ.9 லட்சம் வரையில் செலவு செய்து குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் குழந்தையை வைத்து பராமரிக்கும் வசதிகள் சந்தியா கருத்தரிப்பு மையத்தில் இல்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 30 வாரங்களுக்கு மேல் ஆன குழந்தைகள் மட்டும்தான் இங்கு சிகிச்சை பெறும் வசதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குழந்தைகளை கவனக்குறைவாகவும், அஜாக்ரதையாகவும் துணியில் சுற்றி சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவ மையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் ஒரு நாள் ஒன்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் சேர்த்து இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது 28வது வாரம் நடப்பதால் இன்னமும் 2 வாரங்கள் வரையில் குழந்தைகள் சென்னையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  
இவ்வளவு பிரச்னைகளை சந்தித்துவிட்டு சந்தியா கருத்தரிப்பு மையத்தினர் எதுவும் நடக்காதது போன்று செயல்படுகின்றனர். பலர் பஞ்சாயத்து பேசி ÔபÕ வைட்டமினை கறந்து சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மோனிஷா, சந்தியா கருத்தரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் கருத்தரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையை நடத்தி பணம் பார்த்து வருகின்றனர். இதனால் விலை மதிப்பில்லாத மனித உயிர்களுடன் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது சந்தியா கருத்தரிப்பு மைய நிர்வாகம் என்றால் மிகையாகாது. இவ்வளவு விசாரணைக்கு பிறகுதான் இங்கு அடிப்படை வசதி கூட இல்லை என்பது இன்று வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இதேபோன்று வேலூர் கிரீன் சர்க்கில் அருகில் உள்ள ஒரு மூன்று எழுத்து கொண்ட கருத்தரிப்பு மையத்திலும் இதேபோன்று பல பிரச்னைகள் நடந்து வருவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. வேலூர் சைதாப்பேட்டையில் செயல்பட்டு வந்த இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவர் சங்கரை இந்திய மருத்துவ கவுன்சில் எப்படி கண்டறிந்ததோ அதேபோன்று மனித உயிர்களுடன் மருத்துவம் என்ற பெயரில் தைரியமாக விளையாடும் இதுபோன்ற மருத்துவமனைகளுக்கும் நிரந்தரமாக சீல் வைக்க இந்திய மருத்துவ கவுன்சில் முன் வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. 

உறவுகள் உன்னதமாவது பிள்ளைப்பேறால் தான் என்பது சொல்லித்தெரிவதில்லை. ஆனால் பலருக்கும் பிள்ளைப்பேறு கேள்விக்குறியாக உள்ளது வேதனையான விஷயமே. கல்வியை வியாபாரமாக்கி விட்டதோடு நிற்காமல், மருத்துவத்துறையையும் வியாபார நோக்கில் பலியாக்கி பல குடும்பங்களின் சொத்துக்களும் வீணாய்போய்  சொந்தங்களும் செத்துப்போய் நடுவீதிக்கு வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு குழந்தைப்பேறு விஷயத்துக்காக கருவூட்டல் மையம் என கல்லா கட்டுபவர்களை  அந்த ஆண்டவன்தான் கவனிக்கணும் தண்டிக்கணும். எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு பணம் கொடுத்தால் சமாளிக்கலாம் என்ற கலாச்சாரத்தை வளர்த்தல் மிகவும் ஆபத்து. அரசு இதுகுறித்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கைக்கு எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். 
மேலும் இந்த மருத்துவமனையில் வாடகை தாய் என்கின்ற பெயரில் பல சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருவதாகவும் ஒருபுறம் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் உண்மை விவரம் விரைவில்...

Label