OUR CLIENTS
தொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி!
தொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி! Posted on 26-Sep-2018 தொடர்ந்து கடலில் கலக்கும் கழிவுநீர் சூழல் சீர்கேட்டில் வடசென்னை கடலோரப் பகுதி!

சென்னை, செப். 26-

வடசென்னை கடலோரப் பகுதியில் தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுற்றுச் சூழல் மாசடைந்து வருவது சமூக ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது. 

ஐக்கிய நாடுகளை சபையின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 1986 ஆண்டிலிருந்து செப்.15 முதல் 18 வரை 4 நாள்கள் உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினங்களில் தன்னார்வலர்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புளைச் சேர்ந்தோர் கடலோரப் பகுதிகளில் குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாரதப் பிரதமரின் இருவார தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கடந்த செப்.15-ம் தேதி தொடங்கி காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2-வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை எலியட் கடற்கரையில் நடைபெற்ற குப்பைகளை அகற்றும் பணியின்போது 4,300 கிலோ பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. 
கடலில் கலக்கும் கழிவுநீர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எண்ணூர் முதல் காசிமேடு வரை அமைந்துள்ள கடலோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கழிவு நீர் கொட்டப்படுகிறது. அத்துடன், இப்பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படாத பகுதிகளில் வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் சுத்திகரிப்பு மையங்களுக்குச் செல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. அதேபோல் எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் நேரடியாக பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுகிறது.
தனியார் ஆலைகளின் கழிவுநீர்: இந்நிலையில், மணலி பகுதிகளில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ராமகிருஷ்ணா நகர் அருகே கடலில் விடப்படுகிறது. 

அதேபோல், விம்கோ பகுதியில் உள்ள குடியிருப்புகள், தனியார் ஆலை உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கே.வி.கே.குப்பம் அருகே கடலில் கலக்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் கழிவுநீர் எவ்வித தடையும் இன்றி கடலில் கொட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருணாலயா தொண்டு நிறுவன அமைப்பாளர் பால்சுந்தர் சிங் கூறியது:

வடசென்னை என்றாலே துர்நாற்றம் வீசும் தூய்மையற்ற பகுதி என்ற கருத்து சென்னைவாசிகளிடம் உண்டு. இதற்கு காரணம் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும்தான். யார் வேண்டுமானாலும் தண்டையார்பேட்டை கடலோரப் பகுதியில் குப்பைகளையோ, கழிவுநீரையோ கொட்டிச் செல்லலாம். 
அதேபோல், மீன் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் விளிம்பில் சிக்கித் தவித்து வருகிறது. இங்கு பிளாஸ்டிக் குப்பைகள், துர்நாற்றத்துக்கு பஞ்சமில்லை.

இத்தகைய நிலையை மாற்ற அரசு நிர்வாகம் நேரடியாக இதில் தலையிட்டு சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுப்பதன் மூலமே சாத்தியம். ஒருசில அரசு துறைகளைச் சேர்ந்தவர்களே கடலோரப் பகுதியின் தூய்மை சீர்கேட்டுக்கு துணை போவது வருத்தம் அளிக்கிறது என்றார் .

Label