OUR CLIENTS
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ண ஜெயந்தி Posted on 25-Aug-2016 கிருஷ்ண ஜெயந்தி

சென்னை:
ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்தது. எட்டு என்பது ராசியில்லாத எண் என்றும் அஷ்டமி திதி ஆகாத திதி என்றும் ஒரு இருக்கிறது. ஆனால் அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான் ஆவணி மாதம் அஷ்டமியை ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றோம்.


நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

பகவான் கண்ணன் அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது? என் நிகழ்ந்தது என்பதை கதைகள் மூலமாகவும் திரைப்படங்கள் மூலமாக அறிந்திருப்போம்.

அரக்க குணம் கொண்ட கம்சனை அளிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பகவானின் அவதாரத்தையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் அறிந்து கொள்வோம்.

தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.

தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு வந்திருந்தான்.

'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.

உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான். தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன். 8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது. 'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்' என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.

குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.

ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது. 'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.

பிருந்தாவனத்தில் கண்ணன்

பிருந்தாவனத்தில் குழந்தை கண்ணன் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்து கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.

நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.

கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன்

கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார்.

இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள்.

குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர்.

அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது. சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் கேட்டார். குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையப் பார்த்து, இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார்.

அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.

தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Label