OUR CLIENTS
வசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்!
வசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்! Posted on 27-Sep-2018 வசூல் வேட்டையில் திளைக்கும் ஆற்காடு காவல் ஆய்வாளர்!

வேலூர், செப். 27-

ஆற்காட்டில் வசூல் வேட்டையில் திளைக்கும் பணியில் நகர காவல் ஆய்வாளர் ஈடுபட்டு வருகிறார். இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு செல்லவே பயப்படும் சூழ்நிலை நிலவ ஆரம்பித்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆனந்தன். இவர் காவல் நிலையத்தில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது என்பது போல நடந்து கொள்வார். குறிப்பாக காவல் நிலையத்தை நாடி வருபவர்களிடம் அவரே விசாரணை நடத்துவார். இவருக்கு கட்டிங் மாஸ்டர் என்று மற்றொரு பெயரும் உண்டு. இவர் ஆனந்தமாக பொழுதை கழித்து வருகிறார். காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம்  கேட்கும் பணத்தை ஆய்வாளருக்கு கொடுப்பவருக்கு மட்டுமே நீதி கிடைக்கிறதாம். ஆனால் பணம் தரவில்லை என்றால் புகார் கொடுத்தவர் மீதே வழக்கு பதிவு செய்துவிடுவாராம் கடமை தவறாத ஆய்வாளர் ஆனந்தன். 

ஆற்காட்டில் நடைபெறாத சமூக விரோதச் செயல்களே இல்லை எனலாம். கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் ஆற்காட்டில் மாமூல் மழை பொழிகிறது. சூதாட்டம் போன்று இங்கு நடக்காத அட்டூழியங்களே இல்லை என்று சொல்ல வேண்டும். குறிப்பாக காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் முதல் யாரும் ஒரு பைசா கூட சம்பாதிக்க கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவு போட்டுள்ளார் கடமை வீரரான காவல் ஆய்வாளர் ஆனந்தன். 

ஆனந்தன் ஒருவர் ஆனந்தமாக வாழ மற்றவர்களை வாட்டி வதைத்து விடுகிறார். இந்நிலையில் இவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை காவல் துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கண்டும் காணாதது போன்று இருந்து கொள்கிறார். பொதுமக்களோ ஆனந்தன் ஆய்வாளர் பெயரைச் சொன்னாலே அஞ்சி பீதியில் உறைந்து விடுகின்றனர் என்றால் மிகையாகாது. சாராய வியாபாரிகளை அழைத்து அவர்களிடம் கடையில் நடைபெறும் விற்பனைக்கு ஏற்ப மாமூல் பேசி வார மாமூல், மாத மாமூல் பெற்றுக் கொள்கிறார். மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சாராய வேட்டைக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு சாராய வியாபாரிகளை முன்கூட்டியே உஷார்படுத்தி தப்பிச் செல்ல வழிவகை செய்து கல்லா கட்டுகிறாராம் கடமை வீரன் ஆனந்தன். ஆற்காடு காவல் நிலையத்தில் ஆனந்தன் மட்டுமே ஆனந்தமாக உள்ளார், மற்ற காவலர்கள் மனக்குமுறலோடு பணியாற்ற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது காவல் நிலையமா? கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமா? என்பது பலரது மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். காவல் நிலையத்தை கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாற்றி விட்டார் பலே கில்லாடி ஆய்வாளர் ஆனந்தன் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆயிரத்தில் தொடங்கி லட்சம் வரை உச்சம் தொடுகிறார் ஆய்வாளர் ஆனந்தன். இருக்கும் வரை சம்பாதித்து கொள்ள வேண்டும், அதாவது காற்றுள்ளபோதே தூற்றி கொள்ள வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லி கொள்கிறாராம் இந்த காவல் துறை அதிகாரி. 

காவல் துறையில் பணியாற்றுவோர் உங்கள் நண்பர்கள் என்று காவல் நிலையத்தில் பெயரளவில் வாசகம் மட்டும் இடம் பெற்றால் போதாது, அதை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றாலே பலர் அஞ்சி நடுங்கி வேலூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை  நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி காவல் நிலையத்தை தலைகீழாக நடத்தி வரும் ஆனந்தன் போன்ற ஆய்வாளர்கள் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று சக காவலர்கள் மத்தியில் ஒரு கோரிக்கை ஒட்டுமொத்தமாக ஓங்கி ஒலிக்கிறது. இது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் காதுகளில் விழவில்லையா?. 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ரௌடிகளை அடியோடு ஒழித்தல் என்று பலதரப்பட்ட சமூக விரோதச் செயல்களை பூண்டோடு வேரறுத்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆனந்தன் செயல் உள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆற்காடு நகர பொதுமக்கள் ஆ-வலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label