கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் - முதல்வர் குமாரசாமி Posted on 27-Sep-2018
தூத்துக்குடி, செப். 27-
கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசியல் நிலைமை சீராக உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல் மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். எங்கள் தரப்பில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றதாக கூறுவது தவறான தகவல். கர்நாடக அரசியல் நிலைமை சீராக உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதா நடத்தும் தாமரை ஆபரேசன் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி வந்த முதல் மந்திரி குமாரசாமி விமான நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, உதவி கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். குமாரசாமி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலும், குமாரசாமி செல்லும் பாதையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.