OUR CLIENTS
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு Posted on 30-Sep-2018 எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப். 30-

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு, எம்ஜிஆர் பொன்மொழி தொகுப்பை வெளியிட்டு விழா பேருரை ஆற்றுகிறார். 

இந்தநிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் அவசர வழக்காக விசாரணை துவங்கி உள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன என அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தரப்பு வாதம் நடைப்பெற்றது. இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட்டது. பேனர் வைக்க அனுமதி வழங்கும் போது சட்டவிதிகள், நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனக் கூறிய உயர்நீதிமன்றம், அகற்றப்பட்ட பேனர்கள் குறித்த அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் தாக்கல் வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Label