OUR CLIENTS
ஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்!
ஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்! Posted on 01-Oct-2018 ஊழல் வலையில் சிக்கியுள்ள வேலூர் மாநகராட்சி டெண்டர்!

வேலூர், அக். 1-

வேலூர் நேதாஜி மார்க்கெட் சந்தை நுழைவு வாயிலில் கட்டணம் (சுங்கம்), தினசரி கடைகள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூல் செய்யும் குத்தகை கடந்த பல ஆண்டுகளாக தனியாருக்கு ஏலம் விடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வந்தது. இதில் தற்போது ஏலம் விடப்பட்டதில் மெகா ஊழல் நடந்துள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

அதாவது வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தரைக்கடை, தினசரி மற்றும் சரக்கு இறக்க வரும் வாகனங்கள் தலைச்சுமை கூடைகள் கொண்டுவருவோர் என தினசரி மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு (தினசரி) ரூ.30,000, ஆயிரத்துக்கும் மேல் வசூலாகும். இந்த சந்தைக்கு மூன்று வருட காலத்திற்கு ஏலம் விடப்பட்டது .கடந்தமுறை விடப்பட்ட ஏலம் இரண்டு ஆண்டுகளே முடிந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் குத்தகையை நிறுத்தி நகராட்சியே நேரடியாக வசூல் செய்ய களமிறங்குவதாக கூறி தனியாருக்கு ஆவணங்கள் ஏதுமின்றி அவர்களை வசூல் செய்ய அனுமதியளித்துள்ளனர்.   இதில் துணை ஆணையர் கண்ணனுக்கு  மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை கைமாறுகிறதாகவும் அதிர்ச்சி தகவல் பரபரக்கிறது. ஆனால் கண்ணனோ தனக்கு எதுவுமே தெரியாது என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்கிறார்.

டிபார்ட்மென்ட் கலெக்‌ஷன் என்ற பெயரில் துணை ஆணையர் கண்ணன் அவருக்கு பணம் கொடுக்கும் நபருக்கு இந்த ஒப்பந்தத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார் எனவும் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கூறுகிறது. தற்போதுள்ள ஒப்பந்த உரிமையாளரான துரைசாமி என்பவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த முறை ரூபாய் ஒரு கோடியே இருபத்தொன்பது லட்சத்து எண்ணூற்று ஐம்பதுக்கு ஏலம் எடுத்து அதில் குறிப்பிட்ட தொகையை கட்டியுள்ளேன். சர்வீஸ் டேக்ஸ் என்று ஒரு தொகையை மாநகராட்சியினர்  என்னிடம் கேட்டனர். இந்த ஏலத்தை நான் எடுத்தபோது விதிமுறைகளில் எந்த இடத்திலும் இந்த சர்வீஸ் டேக்ஸ் குறித்து குறிப்பிடவில்லை. இதை நானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டு நிரூபித்தும் உள்ளேன். ஆனால் என்னுடைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, துணை ஆணையர் கண்ணன் என்பவர் தனக்கு வேண்டியவர்களிடம் ஆதாயத்துக்காக இந்த ஒப்பந்த்ததை கொடுக்கவே இப்போது ஏலத்தை நடத்துகிறார். அதேபோல் முன்பிருந்த ஆணையர் அவரே நேரடியாக இந்த ஏல விவகாரத்தை கையாள்வார், தற்போதுள்ள ஆணையர் இந்த ஏலம் நடத்தும் பொறுப்பை துணை ஆணையர் கண்ணன் வசம் ஒப்படைத்துவிட்டார். அதுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். மேலும் புதிய 2018&2019 ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட ஒப்பந்த்தத்திற்கான கேட்புத்தொகையாக ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்து நான்காயிரத்து நானூற்று முப்பத்து ஒன்று ரூபாய்க்கு இந்த ஒப்பந்தத்தை நான் தொடரவும், முதல் மூன்று மாதத்திற்கான தொகையை கட்ட நான் தயாராக இருந்தும், மாநகராட்சி இதை கண்டு கொள்ளவில்லை, மாறாக என்னுடைய ஏலத்தை ரத்து செய்துவிட்டு  புதிய ஏலத்தை நடத்தவே முனைப்பாக இருந்து ஏலத்தை நடத்தியும் முடித்துவிட்டனர். இதனால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல லட்சங்கள் வீணாகிறது. கடந்த ஆறு மாத காலமாக இப்படித்தான் நிர்வாகம் நடக்கிறது என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து மாநகராட்சி இரண்டாவது மண்டல துணை ஆணையர் கண்ணனை தொடர்பு கொண்டதில், முதலில் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது. வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், அல்லது ஏ1&கிளார்க் ரமேஷ் ஆகியோரிடம் கேளுங்கள் என்றார். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் என்பவரிடம் கேட்டதில் கண்ணன் சாரிடமே கேளுங்கள் என ஒதுங்கிக்கொண்டார். நாம் மீண்டும் துணை ஆணையர் கண்ணனை தொடர்பு கொண்டதில் முன்பிருந்த துரைசாமி என்பவர் தினசரி வசூல் தொகையை சரிவர கட்டாததால் நகராட்சிக்கு சர்வீஸ் டேக்ஸ் கட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர். துரைசாமி உயர்நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த விவகாரத்தால் தான் டிபார்ட்மெனட் கலெக்‌ஷன் செய்யப்பட்டு வந்தது. இதில் ஏற்பட்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் ரத்து செய்யப்பட்ட குத்தகைதாரர் துரைசாமி என்பவர் கலந்துகொள்ளவில்லை. மேலும் இந்த ஏல விவகாரத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என நொந்து கொண்டார்.

ஏலம் விடப்பட்டு விட்டதா? எடுத்தவர் யார்? என்ற கேள்விகளுக்கு விடை தேடி  வேலூர் மாநகராட்சி ஆணையர் விஜயகுமாரை தொடர்பு கொண்டதில் பயிற்சிக்காக  ஹைதராபாத் போய்விட்டு தற்போது தான் வந்ததாகவும் இது குறித்த தெரியவில்லை. நான் விசாரிக்கிறேன் என்றார். நாம் விசாரித்தவரையில் வேலூர் மாநகராட்சி ஊழல் வலையில் சிக்கித்தவிக்கிறதா என எண்ணனத் தோன்றுகிறது. காரணம் எந்த அதிகாரியும் தெளிவான பதிலைக்கூறாமல் மழுப்புகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை ஆனாலும்கூட இந்த மாநகராட்சிக்குட்பட்ட இந்த நேதாஜி சந்தையை முன்னாள் கவுன்சிலர் குப்புசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இவரது ஆட்களைக் கொண்டு சுங்கம் வசூல் செயவதும், பல நேரங்களிள் இவரே நேரடியாக சுங்கம் வசூல் செய்கிறார். நேதாஜி தினசரி சந்தைக்கு நாம் நேரில் சென்றபோது அங்கு தனியார் ஒருவர் டேபிள் சேர் போட்டு வசூலை கவனித்துக் கொண்டிருந்தவரிடம்  நீங்கள் மாநகராட்சி ஊழியரா என கேட்டதற்கு தன்னை செல்வம் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவரிடம் பேசியதில் கடந்த திங்கட்கிழைமையன்று ஏலம் முடிந்துவிட்டது ஜி.மேகநாதன் என்பவர் ஏலம் எடுத்துவிட்டார் அவர் சார்பாக தான் இங்கு வசூல் செய்வதாக கூறினார். இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த ஆர்டர் கையெழுத்தாகிவிடும் என மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம்  இப்படி பொறுப்பின்றி நடந்து கொண்டால் அரசுக்கு மிக அதிகமாக வருவாய் இழப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.. இவ்வாறு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகளை உயரதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதைத் தவிர்த்து அவர்கள்மேல் துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து முறைகேடுகளை களையவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

இது முடிவல்ல ஆரம்பம். திரைமறைவு ரகசியங்கள் விரிவாக ஒரு அலசல் ரிப்போர்ட் விரைவில் வெளிவரும்.

Label