OUR CLIENTS
வேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்!
வேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்! Posted on 01-Oct-2018 வேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்!

வேலூர், அக். 1-

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் சத்துவாச்சாரி மார்க்கமாக செல்லும் அணுகு சாலையில்  நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றியமைத்துள்ளனர். இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகிறது.

வேலூர் மாநகரம் சென்னைக்கு அடுத்த மாநகராட்சி ஆகும். மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். இந்நிலையில் அதே வேகத்தில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனங்களை நிறுத்துமிடமாக மாற்றியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூரில் இருந்து சென்னை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் முதல் மாவட்டத்தின் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களும் தினமும் பயணிக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்பு ஒரு அதிகாரியின் கண்களில் கூட படாமல் போனது எப்படி என்பதுதான் கேள்வியாக உள்ளது. ஒருவர் கூட பொதுநலம் கருதி இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபடவேயில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. ஆனால் இதை தினமும் வழக்கமாக ஒரு நிறுவனம் செய்து வருகிறது. மாநகராட்சி அலுவலர்கள் இதுபோன்ற தவறான விஷயங்களுக்கு துணை போகாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய  வேண்டியவர்கள் ஏனோ இப்படி அற்ப விஷயங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர் என்பது தெரியவில்லை. 

இந்த ஆக்கிரமிப்பை விரைவில் அகற்ற வேண்டும் என்றும், நடைபாதையில் பொதுமக்கள் தங்குதடையின்றி நடந்து செல்ல வழிவகை செய்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியராவது இந்த 

ஆக்கிரமிப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சிக்கு இதுநாள் வரை ஒரு தொலைபேசியிலாவது தொடர்பு கொண்டு உத்தரவிடவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்தோறும் பெறப்படும் புகார் மனு கொடுததும் நடவடிக்கை என்பது எடுக்கப்படவில்லை என்று சத்துவாச்சாரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஜெகதீஸ்வரன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். பொதுவேலையை செய்வதற்கு புகார் மனு வர வேண்டிய அவசியம் இல்லை. தங்களது கையில் உள்ள அதிகாரத்தை வைத்தே அதனால் செய்ய முடிந்த பணிகளை அரசு உயரதிகாரிகள் செய்ய முன்வர வேண்டும். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உள்ள இந்த ஆக்கிரமிப்பு ஒரு அதிகாரியின் கண்களில் கூடவா படவில்லை, இல்லை நமக்கென்ன என்று கண்டும் காணாமல் விட்டு விட்டார்களா? என்பதே பொதுமக்கள் முன் எழுந்துள்ள விடை தெரியாத கேள்வியாக உள்ளது. யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது நமக்கென்ன மனக்கவலை என்று பணியாற்ற மாவட்ட அரசு அலுவலர்கள் பணியாற்ற தொடங்கிவிட்டனர் என்பதையே இந்நிகழ்வு காண்பிக்கிறது. இனி விரைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ, மாநகராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? அல்லது வழக்கம் போல அப்படியே தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label