OUR CLIENTS
காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை!- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை
காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை!- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை Posted on 02-Oct-2018 காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை!- கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை

வேலூர், அக். 2-

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனையில் அலட்சியப் போக்கில் கோழிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குறிப்பாக கால்நடை மருத்துவர் இல்லாமலேயே கம்பவுண்டர் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் கொடுமை தொடர்கதையாக இருந்து வருகிறது.

வேலூர் மாவட்டம், காட்பாடி திருவலம் சாலையில் உள்ளது காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனை. இங்கு தினமும் இந்த கால்நடை மருத்துவமனை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மூடப்படுகிறது. காட்பாடி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கால்நடை மருத்துவர் வருகை தருவதே இல்லை. கால்நடை மருத்துவருக்கு பதிலாக கம்பவுண்டர் சிகிச்சை அளித்து வருகிறார். இந்த கொடுமை தினந்தோறும் அரங்கேறுகிறது. இங்கு கால்நடைகள் வாயில்லா ஜீவன்கள் என்ற மனிதாபிமானத்தோடு சிகிச்சை அளிப்பது இல்லை. மாறாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் செல்லப்பிராணிகளை அலட்சியமாக பார்ப்பதோடு மட்டுமன்றி அவற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் அலட்சியப் போக்கிலே இருக்கிறது. என்ன, அங்கு போ என்று ஒருமையில் மரியாதை குறைவாக பேசுகின்றனர் இங்குள்ள திருமுருகனும், ஜெயக்குமாரும் என்று சொன்னால் அது மிகையாகாது. தெனாவெட்டுடன் பணியாற்றுகின்றனர். இதனால் பல வாயில்லா ஜீவன்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வாயில்லா செல்லப்பிராணிகள் துடிக்க துடிக்க கொல்லப்படுகின்றன. இதுகுறித்து கேட்டால் தெனாவெட்டாக பதில் கூறுகின்றனர். மாத ஊதியம் பெறுவது அரசு மருத்துவமனையில் ஆனால் பணி செய்ய விரும்புவதோ வெளியில் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 

இங்கு செல்லப்பிராணிகளை அழைத்து வரும் பல பொதுமக்கள் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கின்ற பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

இப்படி நேற்று ஒரு கோழிக்குஞ்சு ஒன்று வள்ளிமலை ரோட்டில் இருந்து வெண்கழிசல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி அழைத்துச் சென்று இந்த கால்நடை மருத்துவமனையில் முற்பகல் 11.40 மணிக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த கோழிக்குஞ்சை திரும்பி கூட பார்க்காமல் அங்கு வெளியில் பயன்படுத்தி விட்டு குப்பையில் கிடந்த ஒரு சிரஞ்சியை எடுத்துச் சென்று ஏதோ வேண்டா வெறுப்பாக மருந்து ஏற்றி வந்து அதை கொண்டு வந்து கோழியின் காலில் ஊசி போட்டார் ஜெயக்குமார். அந்த கோழிக்குஞ்சானது அதுவரை நன்றாக சுறுசுறுப்புடன் நடமாடிய செல்லப்பிராணி துடிதுடிக்க அரை மணி நேரத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் வாயில்லா ஜீவன்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். மாடுகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வர முடியாதவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மருத்துவம் அளித்துவிட்டு கல்லா கட்டுகின்றனர் இந்த மருத்துவமனை ஊழியர்கள். இதில்தான் ஆர்வமாக உள்ளனர். மருத்துவமனைக்கு கால்நடைகளுடன் கோழி, நாய் போன்றவற்றை அழைத்து வருபவர்களுக்கு ஏதோ கடமைக்கு பணியாற்றுகின்றனர். அந்த பிராணிகளும் சிறிது நேரத்தில் இறந்து விடுகின்றனவாம். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இத்தனைக்கும் இந்த மருத்துவமனைக்கு பணி நியமனம் செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் திரும்பி கூட பார்ப்பதில்லையாம். பெட் ஷாப், செல்வந்தர்கள் வீடுகளை நாடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற பெருச்சாளிகளை அரசு கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மனிதர்களுக்கு எப்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்களோ அதே போன்று கால்நடைகளுக்கும் கம்பவுண்டர்கள் சிகிச்சை அளிக்க துணிந்து விட்டனர். அதற்கு எதற்கு ஒரு மருத்துவரை அரசு பணிநியமனம் செய்கிறது என்ற சந்தேகம் பலரது மனதில் எழாமல் இல்லை. கால்நடைகள் வாய் திறந்தா சொல்லப்போகிறது. அரசு எவ்வளவோ திட்டம் போட்டு கால்நடைகளை காப்பாற்ற வழிவகை வகுத்து கொடுக்கிறது. ஆனால் இப்படி மனசாட்சியின்றி கல்மனம் படைத்த மனிதர்களால் ஐந்தறிவு செல்லப்பிராணிகள் தங்களுடைய இன்னுயிரை துறந்து விடுகின்றன. பல வீடுகளில் செல்லப்பிராணிகளை குழந்தைகள் செல்லமாக வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த செல்லப்பிராணிகளின் இழப்பு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாக அவர்களது ஆழ்மனதில் ரணமாக பதிந்து விடுகிறது. இதுபோன்ற மனித மிருகங்களை துறை ரீதியான விசாரணைக்கு கால்நடைத்துறை உட்படுத்த வேண்டும். கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் தமிழகத்தில் சத்தமின்றி நடந்து வரும் இதுபோன்ற கொலைகளை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்பதே பாதிக்கப்படும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. பணம் கொடுத்தால் சிகிச்சை அளிக்கப்படும் என்று போர்டு வைத்து மருத்துவமனையை நடத்த வேண்டியதுதானே என்று பலர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மனிதர்கள் போன்றுதான் விலங்குகளுக்கும் உயிர் உள்ளது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். இந்த கால்நடை மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இப்படி கால்நடை மருத்துவர் இல்லாமல் மருத்துவம் பார்க்கச் சொல்லி இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற விடைதெரியாத கேள்விகள் நம்முன் எழுந்துள்ளது. கால்நடை மருத்துவர் பிவிஎஸ்சி படித்து விட்டு சிகிச்சை அளிக்க வருகிறார். 

ஒன்றுமே படிக்காத கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்லுவார்கள் அதுபோன்று மருத்துவருக்கு நிகராக சிகிச்சை அளிக்கும் இதுபோன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். கால்நடைகள் கணக்கெடுப்பு நேற்றுதான் தொடங்கியுள்ளது. இதுபோன்ற மருத்துவமனைகளில் சத்தமின்றி இதுபோன்ற தான்தோன்றித்தனமாக சிகிச்சை அளிப்பதால் கால்நடைகள் கொத்து கொத்தாக மடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதற்கு அரசும், கால்நடைத்துறையும் என்ன செய்யப் போகிறது. கால்நடை மருத்துவர் பதில் சொல்வாரா? அல்லது தவறான சிகிச்சை அளித்த கம்பவுண்டர் பதில் சொல்வாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label