OUR CLIENTS
நீட் தேர்வு விலக்கு ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் தேர்வு விலக்கு ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் Posted on 03-Oct-2018 நீட் தேர்வு விலக்கு ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை
வரும் ஆண்டுத் தேர்வு வருவதற்குள், தமிழக அரசின் நீட் விலக்குக்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனே முயல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம் என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாள் மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி, ஆர்வத்துடன் மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையையும், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தையும் படிப்படியாகக் குறைத்து விடும் சதித்திட்ட மனப்பான்மையுடன் மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

நீட் தேர்வினை தமிழில் எழுதியோர் எண்ணிக்கை மட்டுமின்றி, மற்ற மாநில மொழிகளில் எழுதியோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வரும் மாநில மொழிகளுக்கு எதிரான அபாயகரமான நிலை தொடர்கிறது. ஏற்கெனவே, 2018-ம் ஆண்டிற்கான நீட் கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் 49 பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார்கள்.

கேள்வித்தாள் குளறுபடி தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் பொது நல வழக்கு தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெற்று, தமிழக மாணவர்களுக்கு உயர் நீதிமன்றம் அளித்த நீதியையும் மறுத்து விட்டது மத்தியில் உள்ள பாஜக. அரசு.

மத்திய பாஜக அரசு மாநில மொழிகளிடம் காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால், நீட் தேர்வினை தங்கள் மாநில மொழியில் மாணவர்களால் எழுத முடியவில்லை; ஏற்படுத்தப்பட்டு வரும் இடையூறுகளால் எழுதவும் ஆர்வமாக இல்லை. இந்த நிலை நீடித்தால் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே நீட் தேர்வில் நிலையான இடத்தைப்பெற்று, மாநில மொழிகள் எல்லாம் அடியோடு புறக்கணிக்கப்படும் - மாநில மொழிகளுக்கு உள்ள உரிமை பறிக்கப்படும் மிக ஆபத்தான போக்கு உருவாகி விடும்.

அது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்து விடும். ஆகவே, அனைத்து வகையிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக இல்லாத இந்த நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களுக்குச் சம உரிமை வழங்கவும், சமமான வாய்ப்பு ஏற்படவும், சமத்துவம் மிக்க சமூக நீதி தழைத்திடவும் ஒரே வழி என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாவிற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய பாஜக அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுவதற்குள் இந்த மசோதாவிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு, தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு ஏற்ற சூழலை உருவாக்க அதிமுக அரசும் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Label