OUR CLIENTS
மின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு!
மின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு! Posted on 04-Oct-2018 மின் உற்பத்தி, பகிர்மான கழகங்கள் பிரிப்பு லாப நோக்கில் செயல்பட நிரந்தர தீர்வு!

வேலூர், அக். 4-

மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் லாப நோக்கத்துடன் செயல்படுவதற்கு அவற்றை விரைவில் தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அரசு நிறுவனமான தமிழ்நாடு மின் வாரியம் 1957ல் தொடங்கப்பட்டது. இது தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் தொடரமைப்பு, மின் விநியோகம் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மத்திய அரசு கடந்த 2003ல் மின் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி மின் தொடரமைப்பு மின் உற்பத்தியை தனித்தனி நிறுவனங்களாகவும், மின் பகிர்மான கழகத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களாகவும் பிரிக்க வேண்டும். அதில் மின் தொடரமைப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மின் பகிர்மான கழகத்தை இரண்டு, மூன்று நிறுவனங்களாக பிரித்துள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தை பிரிக்க அலட்சியம் காட்டி வந்த தமிழக அரசு 2010ல் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரு நிறுவனங்களாக பிரித்தது. இவை மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றின் தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மின் உற்பத்தி பகிர்மான கழகம் போன்றவை இயக்குனர்கள் கட்டுப்பாட்டிலும் செயல்படுகின்றன. அவர்கள் வாரிய தலைமை பொறியாளர்கள்.

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம், உபகரணம், நிலக்கரி கொள்முதல் ஆகியவை காரணமாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் சுமை 1 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. பின் 2016 முதல் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. உபகரணங்கள் மற்றும் நிலக்கரியை சந்தை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 2014&15 வரை ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை கண்டு வந்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2015&16ல் 5,780 கோடி ரூபாய். 2016&17ல் 4,348 கோடி ரூபாயாக இழப்பை குறைத்தது.

மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் நிதி நிலைமை சீரடைய 2015ல் உதய் என்ற மின் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டப்படி 2015 செப்., நிலவரப்படி மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இதன்படி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மொத்த கடன் 81 ஆயிரத்து 312 கோடி ரூபாயில் அதிக வட்டி செலுத்தக் கூடிய கடன் தொகை 36 ஆயிரத்து 833 கோடி ரூபாய்.

உதய் திட்டத்தில் தமிழக அரசு 2017ல் இணைந்ததை அடுத்து அதிக வட்டி செலுத்தக்கூடிய கடனில் 75 சதவீதமான 22 ஆயிரத்து 815 கோடி ரூபாயை அரசு ஏற்றது. இருப்பினும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் லாபத்தை ஈட்டும் வகையில் செயல்படவில்லை. மின் தொடரமைப்பு கழகம் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வருகிறது. அதேபோல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் லாப நோக்கத்துடன் செயல்பட அவற்றை தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியதாவது: மின் வாரியம் மிகப்பெரிய நிறுவனம். அனைத்து பணிகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் துல்லியமாக கவனிக்க முடியாது. எனவே வாரியத்தை பிரிக்க அறிவுறுத்தப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய அழுத்தத்தால் 2010ல் மின் வாரியம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் தொடரமைப்பு கழகம் என பிரிக்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைவராக நியமித்தது.

நிர்வாக திறனை அதிகரிக்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை இரண்டாகவும், மின் பகிர்மான கழகத்தை மூன்று நிறுவனங்களாகவும் பிரிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2011ல் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இதுவரை பிரிக்கப்படவில்லை. தனி நிறுவனமாக்குதல் என்பது தனியாரிடம் வழங்குவது என்று அர்த்தம் அல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை தலைவராக நியமித்து அவரின் கீழ் செயல்பட வைக்கலாம். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரே நிறுவனமாக செயல்படுவதால் ஒரு நிறுவனத்தின் லாபம் மற்ற நிறுவனத்திற்கு செலவாகிறது. 

ஒட்டு மொத்தமாக பார்த்தால் நஷ்டம்தான் ஏற்படுகிறது. மின் உற்பத்தி தனி நிறுவனமாக செயல்பட்டால் அவற்றின் கீழ் அனல், நீர், எரிவாயு மின் நிலையங்கள் வரும். அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் மின் பகிர்மான கழகத்திற்கு விற்கப்படும். கிடைக்கும் லாபத்தில் அந்நிறுவனம் புதிய மின் நிலையங்களை அமைக்கலாம். ஏற்கனவே உள்ள மின் நிலையங்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கலாம். மின் பகிர்மான கழகத்தை மூன்று, நான்கு நிறுவனங்களாக பிரித்தால் ஒவ்வொரு நிறுவனத்திற்கு இடையிலும் போட்டி ஏற்படும். அவை மின் திருட்டு, மின் இழப்பை நிரந்தரமாக தடுத்து 24 மணி நேரமும், சீராக மின் சப்ளை செய்யும். மின்சார விற்பனைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்படும். நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்படுவது மட்டுமின்றி தரமான சேவையிலும் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார். ஆனால லாப நோக்கில் செயல்பட முடிவு செய்துள்ள அரசு 2 மணி நேரத்துக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்துவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. மக்கள் தலையில் அதிக சுமையை ஏற்ற மத்திய, மாநில அரசுகள் தயாராகி விட்டன. போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் என்று நடத்தி விட்டு மக்கள் வழக்கம்போல அமைதியாகி விடுவார்கள் என்பதே அரசின் தப்புக்கணக்கு ஆகும். இதற்கு விரைவில் அரசு பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. மக்கள் மீது சுமையை சுமத்தாமல் இலகுவாக அரசை வழிநடத்திச் செல்ல வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். இதற்கு தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி என்ன செய்யப் போகிறார் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆர்வமாக உள்ளது. இதற்கு அடித்தளமாக உள்ள தேவையில்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து துண்டிக்க வேண்டும். ஒரே வீட்டுக்கு 3 இணைப்புகள் வாங்கி வைத்து கொண்டு 100 யூனிட் இலவச மின்சாரத்தை அனுபவித்து வருகின்றனர். குடிசை தொழில் என்று காண்பித்து ஒருபுறம் கொள்ளையடிக்கின்றனர். 

இப்படி தேவையின்றி மின் இணைப்பு கொடுத்த மின்வாரிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது தப்பு செய்தவர்களுக்கு ஷாக் அடிக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்யுமா? மின்வாரியத்தில் பணியாற்றும் சில விரும்பத்தகாத களைகள், அதிகாரிகள் முதல் களப்பணியாளர்கள் வரையில் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இதை அரசு செய்யுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label