OUR CLIENTS
மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும்- குட்டெரஸ்
மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும்- குட்டெரஸ் Posted on 04-Oct-2018 மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும்- குட்டெரஸ்

புதுடெல்லி, அக். 4-

ரோஹிங்கியா விவகாரத்தில் வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என ஐ.நா. பொது செயலாளர் குட்டெரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியான்மர் நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்டு 25ந்தேதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதலை நடத்தியது.  இதில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அங்கிருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தப்பி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

ராணுவத்தின் இந்நடவடிக்கையை சிறுபான்மை முஸ்லிம் மக்களின் இன அழிப்பு நடவடிக்கை என ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா கூறியது.
ஆனால் இதனை மறுத்த மியான்மர் அரசு, செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. அமைப்பு மியான்மரில் புலனாய்வு விசாரணை நடத்த தடை விதித்தது.
சமீபத்தில், ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருந்தது.
இதற்கு பதில் தரும் வகையில், ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ, எந்தவொரு நாட்டிற்கோ, அமைப்பிற்கோ அல்லது குழுவுக்கோ உரிமையில்லை என மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் லைங் கூறினார்.

இந்நிலையில், 3 நாள் சுற்று பயணம் ஆக டெல்லிக்கு வருகை தந்துள்ள ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ரோஹிங்கியா விவகாரத்தில் வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மருக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் என கூறினார்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது காட்டப்படும் பாகுபாடு போல் வேறு எங்கும் கண்டது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.  அவர் நாளை நியூயார்க் நகருக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.

Label