OUR CLIENTS
மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்!- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்
மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்!- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள் Posted on 05-Oct-2018 மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடரும் காவலர்கள் இரவு ரோந்து பணி இடையில் நிறுத்தம்!- கிடப்பில் உள்ள 19 ஆயிரம் குற்ற வழக்குகள்

காஞ்சிபுரம், அக். 5-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட காலமாகவே முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே உள்ளதால் விசாரணை இன்றி குற்ற வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, வண்டலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், மறைமலை
நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி ஆகிய பகுதிகள் தொழிற்பேட்டைகளாக மாற்றமடைந்துள்ளன.  சுற்றுப்புற பகுதிகளிலும், தனியார் தொழிலக நிறுவனங்கள் பெருகியுள்ளன.

இந்நிலையில் தொழில், வேலை, கல்வி உள்ளிட்டவற்றுக்காக வட மாநில மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் இப்பகுதியினர் குடியேறி வசிப்பிட வர்த்தக பகுதிகளும் 
விரிவடைந்து வருகின்றன. இந்நிலையில் ஒருபுறம் வளர்ச்சி பெற மறுபுறம் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன. மேற்கண்ட பகுதிகளில் பெண்களிடம் நகை பறிப்பு, ஆண் களிடம் மொபைல் போன் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்கள் நடக்கின்றன.

இவற்றை விசாரிக்க போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கவோ கண்காணிக்கவோ இயலாமல் வழக்குகள் அதிகரித்துள்ளன.குறிப்பாக வட மாநில கூலித்தொழிலாளர்கள் இப்பகுதிகளில் நிறைந்துள்ள நிலையில் அவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டறிவதும் சிக்கலாக உள்ளது.  சாதாரண குற்றங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் போலீசார் வாங்க மறுக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை இருந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.இந்த வழக்குகளிலும் ஒரு சில வழக்குகளிலும் மட்டும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட்டு நகைகள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஆனால் மற்றவர்கள் கொடுத்த புகார்கள் காவல் நிலையங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களில் கொள்ளையர்களை பிடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நகைகளை பெற்று தருவதில் போலீசார் அக்கறை செலுத்துவதில்லை. மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்கவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் எஸ்.பி., தனிப்படையினர் உள்ளனர்.இந்த தனிப்படை பிரிவினர் ரவுடிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதில்லை.
வீடு புகுந்து திருட்டு, பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற குற்ற வழக்குகள் 2015ம் ஆண்டிலிருந்து 19 ஆயிரத்து, 225 வழக்குகள் விசாரணை இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே திருட்டு சம்பவ வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி நகைகளை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் வலியுறுத்துகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கோட்டம் முதல் இடத்திலும் வண்டலூர் காவல் துணை கோட்டம் இரண்டாம் இடத்திலும் காஞ்சிபுரம் காவல் துணை கோட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.செங்கல்பட்டு காவல் துணை கோட்டம் நான்காம் இடத்திலும், மாமல்லபுரம் காவல் துணை கோட்டம், ஐந்தாம் இடத்திலும், மதுராந்தகம் காவல் துணை கோட்டம் ஆறாம் இடத்திலும் உள்ளன.

இதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்துள்ளது போலீசார் இரவு ரோந்து என்று ஒன்று செல்லாததே காரணமாகும். வாகன தணிக்கையில் காட்டும் அக்கரையை இரவு ரோந்து சென்று அனைத்து தெருக்களிலும் கண்காணித்தால் திருட்டுகள் குறைந்திருக்கும். திருடர்களுக்கு பயம் வந்திருக்கும். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் கணிசமாக குறைந்திருக்கும். ஆனால் இரவு பணிக்கு வரும் காவலர்கள் ஒரே இடத்தில் கும்பலாக நின்று கொண்டு பேசி பொழுதை கழித்து விட்டு இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தங்கள் வீராப்பை காண்பித்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். இரவு ரோந்து என்பது காவல் துறையில் நேற்று இன்று வந்ததல்ல. மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரை தொடர்ந்து இருந்து  வருகிறது. ஆனால் காவலர்கள் தங்கள் வசதிக்காக நிறுத்தி கொண்டனர். இதற்காக பணியமர்த்தப்பட்டவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதந்தோறும் நடைபெறும் குற்ற வழக்குகள் தொடர்பான கூட்டத்தில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து இனியாவது தினமும் தொடர்ந்து நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label