OUR CLIENTS
ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர்! - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு!
ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர்! - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு! Posted on 05-Oct-2018 ஒரு லட்சம் ரூபாய் கடனுக்காக  வீட்டை பூட்டிய கந்துவட்டிக்காரர்! - 2 மாதமாக நடுத்தெருவில் குழந்தைகள் தவிப்பு!

கிருஷ்ணகிரி, அக். 5-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், வீட்டுக்கு கந்துவட்டிக்காரர் பூட்டு போட்டார். இதனால் தொழிலாளி குடும்பம் 2 மாதமாக தெருவில் தவித்துக் கொண்டிருக்கிறது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன் (64). இவருக்கு பெருமா (56) என்ற மனைவியும், சுரேஷ் (35) என்ற மகனும் உள்ளனர். சுரேஷ் மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 5, 2 வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் தருமன் வீடு கட்டி குடியிருந்து வந்தார். வீட்டின் முன் சிறிய ஓட்டலும் நடத்தினார். 3 வருடங்களுக்கு முன் மகனின் மருத்துவ செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ50 ஆயிரத்தை கந்து வட்டிக்கு வாங்கினார். அப்போது வீட்டை அடமானமாக எடுத்துக்கொள்வதாக கூறி, பத்திரச் செலவு ரூ13 ஆயிரம் போக மீதமுள்ள ரூ37 ஆயிரத்தை தருமனிடம் அவர் கொடுத்தார். இந்நிலையில் 6 மாதத்துக்கு பின் தருமனுக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரரிடம் மருத்துவ செலவுக்காக மேலும் ஒரு லட்சம் பணம் பெற்றுள்ளார். ஓராண்டுக்கு பின் ஒரு லட்சம் ரூபாயை தருமன் திரும்ப செலுத்தினார். 

ஆனால், கந்துவட்டிக்காரர், வட்டி மட்டுமே வந்துள்ளது. அசலை தரவேண்டும் என கூறியுள்ளார். 2 ஆண்டுகளாக வட்டி மற்றும் அசலை கொடுக்க முடியாமல் தருமன் தவித்து வந்தநிலையில் கந்துவட்டிக்காரர், கடந்த ஆக.25ம் தேதி தருமன் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு வீட்டுக்கு பூட்டு போட்டார். தருமன், குடும்பத்தினர் பூட்டிய வீட்டின் வாசலில் கடந்த இரு மாதமாக வெயில், மழையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சமையல் பொருட்கள், துணிகள் என பல்வேறு பொருட்களும் வீட்டினுள் இருப்பதால் அவர்கள் வழிதெரியாமல் தவிக்கின்றனர். மாற்றுத் துணிக்கு வழியில்லாமல் ஒரே ஆடையை துவைத்து உடுத்தி வருகிறார்கள். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசில் தருமன் புகார் செய்தார். அதற்கு வீட்டை கிரயம் செய்து கொடுத்து விட்டதால், நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என போலீசார்  கூறிவிட்டனர். காவல் துறைக்கு கந்துவட்டிக்காரர் கணிசமான தொகை கொடுத்து கவனித்து விட்டதாக ஒருசாரர் புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் காவல் துறையானது ஆங்காங்கே மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கந்துவட்டி, மீட்டர் வட்டி வாங்குவது சட்டப்படி குற்றம். இதுதொடர்பாக புகார் தெரிவிக்க விரும்புவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு பிரிவு செயல்படுகிறது. 

அங்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. நடுத்தெரு நாராயணா என்று உள்ள இந்த குடும்பத்துக்கு காவல் துறை எந்த உதவியும் செய்ய இயலாமல் உள்ளது பெரும் சந்தேகத்தை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியுமா? என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் அந்த கந்துவட்டிக்காரர் கிடுக்கிப்பிடி போட்டு ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளார். நிலைமை இப்படி இருக்க எந்தவித பயமும் இன்றி மேலும் ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டும் என கந்துவட்டிக்காரர் கேட்டு வருகிறார். பணம் கொடுப்பதாக கூறி, அப்பாவி குடும்பத்தை ஏமாற்றி வீட்டை அபகரித்து, அவர்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த கந்து வட்டிக்காரர் மீது மாவட்ட ஆட்சியர் பிரபாகரும், போலீஸ் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label