OUR CLIENTS
தி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்!
தி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்! Posted on 08-Oct-2018 தி.மு.க.,வை அலற விட்ட நடிகர் விஜய்!

சென்னை, அக்.8-

ரொம்ப நெருக்கடி ஏற்பட்டால் தகுதியான ஆள் மேலே வருவான், அவன் தலைவனாக நிற்பான் என சர்கார் பட விழாவில் நடிகர் விஜய் பேசிய பேச்சு தி.மு.க.,வை அலற விட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் கால் பதிக்க நடிகர்கள் கமல், ரஜினி முன்வந்துள்ளனர். இதில் கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி லோக்சபா தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் ரஜினி தன் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் திடீர் அரசியல் பிரவேசத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். அதற்கு அச்சாரமாக சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் சரியாக பயன்படுத்தியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த இப்படத்தின் இசை விழா சென்னையில் அண்மையில்  நடந்தது. அந்த விழாவில் விஜய் பேசியதாவது: வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைந்து விடக் கூடாது என்பதற்காக சிலர் உழைக்கின்றனர். இது எனக்கு மட்டுமில்லை. எல்லாருக்கும் இருக்கிறது. வாழ்க்கை எனும் விளையாட்டை பார்த்து விளையாட வேண்டும். உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும் இருக்க வேண்டும். இதை பின்பற்றினால் வாழ்க்கை ஜம்முனு இருக்கும். பலர் தேர்தலில் நின்ற பின் தான் சர்கார் அமைப்பர். 

நாங்கள் சர்கார் அமைத்து தேர்தலில் நிற்க போகிறோம். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால் நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன், மக்களிடம் உண்மையாக இருப்பேன். நான் அரசியலுக்கு வந்தால் எல்லாரும் சொல்வது போல் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். அதற்கு என்ன தேவையோ, அதை செய்வேன். லஞ்சத்தை ஒழிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. நம் வாழ்க்கையில் ஊழல் பழகி விட்டது. அதை ஒழிக்க வேண்டும். மேலே இருக்கிறவர்கள் வாங்குவதால் தான் கீழே உள்ளவர்கள் வாங்குகின்றனர். காந்திஜி கையில் இருந்த காங்கிரஸ் நல்ல கட்சியாக இருந்தது. இப்பவும் நல்ல கட்சி தான். காந்தியை, நேரு, ராஜாஜி, காமராஜர் பின்பற்றினர். தலைவர் எவ்வழியோ மற்றவர்களும் அவ்வழி. எது நடந்தாலும் இறுதியில் தர்மம் தான் வெற்றி பெறும். ஆனால் தாமதமாக வெற்றி பெறும். ரொம்ப நெருக்கடி ஏற்பட்டால் தகுதியான ஆள், அடிபட்டு மேலே வருவான். அவன் தலைவனாக நிற்பான். அவனுக்கு கீழே ஒரு சர்கார் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் தி.மு.க., பேச்சாளர் நடிகர் ராதாரவி, விஜயை பாராட்டி பேசினார். அதேபோல் படத்தின் தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் விஜய் பேச்சை கை தட்டி பாராட்டினார். விஜய் பேச்சு தி.மு.க.,வில், அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ஸ்டாலின், முதல்வர் வேட்பாளராக உள்ளார். இந்த நேரத்தில் தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவன விழாவில் முதல்வர் பதவி குறித்து விஜய் பேசியது அக்கட்சி மேலிடத்திற்கு பிடிக்கவில்லை. அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Label