OUR CLIENTS
ஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்!
ஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்! Posted on 08-Oct-2018 ஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்!

சென்னை, அக்.8-

தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் அடுத்தடுத்து ஊழல் புகார்களை ஸ்டாலின் கூறி வருவதை அடுத்து தி.மு.க., ஆட்சியில் நடந்த முறைகேடுகளை தோண்டித் துருவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என பலர் மீது தி.மு.க., தொடர்ந்து ஊழல் புகார்களை கூறி வருகிறது. அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த ஊழல் புகார்களால் அ.தி.மு.க.,வும் திணறி வருகிறது. தி.மு.க., ஆட்சி காலத்தில் ஊழலே நடக்காதது போன்று பிரசாரம் செய்வதால் அதற்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க.,வும், முதல்வர் பழனிசாமி அரசும் தயாராகிவிட்டன. தி.மு.க., ஆட்சியின் போது புது தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததா என விசாரிக்க தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அரசு பரிந்துரை செய்து உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை நகர மேயர்களாக ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பதவி வகித்த போது நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. 

சென்னை மாநகர மேயராக 1996 - 2001 வரை ஸ்டாலினும், 2006 - 2011ம் ஆண்டு வரை மா.சுப்பிரமணியனும் பதவி வகித்தனர். இந்த 10 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் நடந்த பணிகள் குறித்து ஆய்வு செய்த தணிக்கை துறை விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த 10 ஆண்டுகளில் திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் போடுவது, மேம்பாலங்கள் கட்டுவது, வாகன பராமரிப்பு என பல திட்டங்களில் நடந்த நிதி மேலாண்மை குறித்து ஆய்வு செய்த தணிக்கை துறை மொத்தம் 1,016.79 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. அப்போது தி.மு.க., ஆட்சியில் இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சியினருக்கு அதிகாரிகள் துணை போனதே காரணம் என அப்போதே அ.தி.மு.க.,வும் குற்றம் சாட்டியிருந்தது. அலைக்கற்றை உரிமம் வழக்கில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த பிரச்னை பூதாகரமானதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததா என விசாரிக்க சி.பி.ஐ.,க்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதே பாணியில் சென்னை மாநகராட்சி தணிக்கை அறிக்கை அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ஊழல் நடந்ததா என விசாரிக்க மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

தணிக்கை அறிக்கை தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது: அனைத்து மாநகராட்சிகளின் கணக்கு வழக்குகளையும் தணிக்கை துறை ஆய்வு செய்யும். ஏதேனும் தில்லுமுல்லு கண்டறியப்பட்டால் தணிக்கை தடைகள் எழுப்பப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். விளக்கம் தராவிட்டாலோ, தவறு செய்திருந்தாலோ அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம், சம்பள பிடித்தம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். 2011 வரை நடந்த சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை தடை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான் மேயரான பின் மாநகராட்சி பணிகளில் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் அந்த இழப்பை செலுத்திய பின்தான் ஓய்வு பெற முடியும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தணிக்கை தடை இல்லை என்ற சான்றிதழை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் மேயர் பதவியில் இருந்தவர்கள் குற்றம் செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளனர்.

தி.மு.க., ஆட்சியில் இந்த 1,016 கோடி ரூபாய் இழப்பு குறித்து மாநகராட்சி மன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது சென்னை நகர எம்.எல்.ஏ.,க்களாக இருந்த ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாமன்ற கூட்டத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியிருக்க முடியும். பல முறை அழைப்பு விடுத்தும் அவர்கள் கூட்டத்திற்கே வரவில்லை. காரணம் இந்த இழப்பிற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்புதான். இவ்வாறு சைதை துரைசாமி கூறினார்.

இந்த இழப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் போது அப்போது, மாநகராட்சியில் இருந்த தி.மு.க., கவுன்சிலர்கள், பணியாற்றிய பல அதிகாரிகள் சிக்குவர் என தெரிகிறது.

Label