OUR CLIENTS
08-10-2019
08-10-2019 Posted on 08-Oct-2018 08-10-2019

மேஷம்
ராசியை புதன், சுக்கிரன், ராசிநாதன் செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் பார்க்கும் வாரம் இது. மே‌ஷத்திற்கு இது மாற்றங்களை அளிக்கின்ற வாரம். சிலருக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட லாபங்கள் உண்டு. இளைய பருவத்தினருக்கு வரன் பார்த்தல், நிச்சயம் போன்ற சுப வி‌ஷயங்கள் நடக்கும். உங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் இப்போது நிறைவேறும். பணவரவுக்கு தடை ஏதும் இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் திருப்திகரமான நல்லபலன்கள் உண்டு.
அனைத்து மே‌ஷ ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒருவகையில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். 8,10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 12ம்தேதி அதிகாலை 4.34 மணி முதல் 14ம்தேதி மதியம் 1.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.
ரிஷபம்
ராசிநாதன் சுக்கிரன் நீண்ட நாட்கள் ஆறாமிடத்தில் ஆட்சி பெறும் நிலை பெறுவதால் ரி‌ஷபத்தினர் எது நல்லது, எது கெட்டது. யார் நல்லவர். யார் கெட்டவர் என்று குழம்பித்தவிக்கின்ற காலமாக இது இருக்கும். எதிலும் முடிவெடுக்க முடியாமல் ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒருகால் என தெளிவில்லாமல் இருப்பீர்கள். முடிவுகளை ஒத்திப்போட வேண்டிய வாரம் இது. பிரயாணங்களும் அலைச்சல்களும் இப்போது உண்டு. சிலருக்கு கடல் தாண்டிப்போகும் வெளிநாட்டுப் பயணங்களும் இருக்கலாம்.
தொழில் இடங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். மூன்றில் ராகு இருப்பதால் முக்கியமான ஒரு வி‌ஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். வேலையில் இருப்பவர்களுக்கு டார்ச்சர் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்ல பெயர் கிடைக்கும். சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சலில் இருப்பீர்கள்.
மிதுனம்
அனைத்து மிதுனத்தினருக்கும் நம்பிக்கையையும், நல்லவைகளையும் மட்டுமே கொடுக்கும் வாரம் இது. ராசிநாதன் சுபகிரகங்களான குரு, சுக்கிரனுடன் இணைந்து நட்பு வீட்டில் இருப்பது சாதகம் என்பதால் முன்னேற்றத்தை அடைவீர்கள். யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி வலுவடைவதால் மனைவி, சகோதரி, தாய், மகள் போன்ற பெண் உறவுகள் மூலம் சந்தோ‌ஷம் உண்டு. மனதில் எண்ணி இருந்த வி‌ஷயத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். டிராவல்ஸ், டிரைவர் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்மைகளைத் தரும்.
இந்த வாரம் குருப்பெயர்ச்சி நடப்பதால் சிலருக்கு தொழில் மற்றும் வாழ்க்கை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். வெளிநாட்டு வி‌ஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். குருபகவான் வலுக்குறைவதால் செலவுகள் இனி அதிகமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணவரவும் இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். தந்தை வழியிலும் செலவுகள் உண்டு. வயதான அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள்.
கடகம்
வாரம் முழுவதும் ராசிநாதன் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதுடன், இந்த வாரம் முதல் ராசிக்கு குருபார்வை அமைவதால் இனி நீங்கள் தொட்டது துலங்கும். இதுவரை இருந்து வந்த பின்னடைவுகளை முன்னேற்றமாக கடகத்தினர் மாற்றிக் கொள்ளும் வாரம் இது. அனைத்து தரப்பு கடகத்தினரும் மேன்மை அடைவீர்கள். ஆறாமிடத்தில் இருக்கும் சனி உங்கள் எதிரிகளின் தலையைத்தட்டி வைப்பார் என்பதால் எதிர்ப்புகள் இன்றி நீங்கள் நடைபோடும் வாரம் இது. எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் ஜெயிப்பீர்கள்.
இளைய பருவத்தினருக்கு இனிமேல் முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். சந்திரன் வலுவாக இருப்பதால் வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். வியாபாரிகளும் சுயதொழில் செய்பவர்களும் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. மொத்தத்தில் கடகத்தினருக்கு எதிர்கால நன்மைகளை காட்டும் வாரம் இது.
சிம்மம்
ராசிநாதனும், செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பதால் சிம்மத்திற்கு நன்மை தரும் வாரம் இது. இதுவரை முயற்சி செய்தும் கிடைக்காமல் இருந்தவைகள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் துணையுடன் கிடைக்கும். சிம்மத்தினர் சந்தோ‌ஷமாக இருக்கும் வாரம் இது. சூரியன் வலுவாக இருப்பதால் நிலுவையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.
சிலருக்கு உயர் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. குலதெய்வ தரிசனம் கிடைக்கும். தகப்பனாரால் மனக்கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் வி‌ஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற வி‌ஷயங்கள், அரபு நாடுகள் தொடர்பான வி‌ஷயங்களில் வெற்றிகளும் லாபங்களும் இருக்கும்.
கன்னி
இரண்டில் புதன், சுக்கிரன் பதினொன்றில் ராகு என கிரகநிலைகள் சாதகமாக அமைந்துள்ள வாரம் இது. இப்போது நீங்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு நிகழ்வும், நற்பலன் தருவதாக அமையும் என்பதால், தள்ளி வைத்திருந்த வி‌ஷயங்களை இந்த வாரம் செய்து முடித்து வெற்றியடைவீர்கள். உங்களில் சிலருக்கு பங்குச் சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலே‌ஷன் துறைகளில் வெற்றியும், வருமானமும் கிடைக்கும். லாபத்தில் இருக்கும் ராகுவால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் இப்போது நீங்கள் ஜெயிக்க முடியும்.
கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து வி‌ஷயங்களும் கை கொடுக்கும். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடப்பதால் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள். கிரகங்கள் தருகின்ற இந்த நிலையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் இனி எல்லாம் கைகூடும்.
துலாம்
ராசியில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதும், அவருடன் பாக்கியாதிபதி புதன் இணைந்திருப்பதும் துலாம்ராசிக்கு முன்னேற்றங்களைத் தரும் என்பதால் இந்த வாரம் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றம் இருக்கும். வீடு, வாகனம், தாயார், தன் சுகம் போன்றவைகளில் நல்லது நடக்கும். சிலர் உல்லாசப்பயணங்கள் மற்றும் ஜாலியான அனுபவங்களுக்கு வீண்செலவு செய்வீர்கள்.
துலாம் ராசிக்கு அனைத்து தடைகளும் நீங்கி மடை திறந்த வெள்ளம் போல் நன்மைகள் வருகின்ற வாரம். இது மற்ற கிரகங்களும் யோகநிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும். அரசு ஊழியருக்கு இது நல்ல வாரம். சிலருக்கு தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு.
விருச்சிகம்
குருப்பெயர்ச்சி முதல் விருச்சிக ராசிக்கு இருந்து வரும் பின்னடைவுகள் அனைத்தும் தீர ஆரம்பிக்கும். இனிமேல் விருச்சிகத்திற்கு வேதனைகள் இல்லை. உங்களின் எல்லாக் கஷ்டங்களுக்கும் முடிவு வந்தே தீர வேண்டும் என்பதால் ஒருநாள் நல்லவை நடந்துதான் ஆக வேண்டும். மலை மீது ஏற ஆரம்பித்தால் ஏறிக் கொண்டே நிலாவிற்குப் போக முடியாது. ஒருநாள் உச்சிக்குப் போய் பிறகு இறங்கித்தான் ஆக வேண்டும். அது போல விருச்சிகத்தின் வேதனைகளும் விலகித்தான் தீர வேண்டும். இனிமேல் அது நடக்கும்.
தொழிலில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. கணவன்மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். அந்தஸ்து கௌரவத்திற்கு குறைவு வராது. பண வரவு திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் தொந்தரவுகள் குறையும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல்துறையினருக்கும் நன்மைகள் உண்டு. திறமையை மட்டும் வைத்துத்தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
தனுசு
விருச்சிக ராசியினர் ஜாதகம் பார்க்க வருவது மெதுமெதுவாக குறைந்து, தனுசுவினர் ஜோதிடம் பார்க்க வருவது கூடிக் கொண்டே போகிறது. குறிப்பாக சென்ற வருடம் இதே நேரம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக ஜோதிடரிடம் வந்து கொண்டிருந்தார்கள். இப்போது மூலம், பூராடம் நட்சத்திர இளைஞர்கள் அதிகம் பேர் வருகிறீர்கள். தனுசுராசி இளைஞர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள். எதிலும் விரக்தியும், சோம்பலும் வரும் நேரம் இது. இன்னும் ஒரு வருடத்திற்கு இது நீடிக்கும்.
கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

 மகரம்
வார ஆரம்பத்தில் நடப்பவைகள் உங்களை கொஞ்சம் டென்‌ஷனாக்கினாலும், யோகாதிபதிகள் சுக்கிரனும் புதனும் பத்தாமிடத்தில் வலுவுடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது. மகரத்தினர் எப்போதும் நிதானம் இழக்காதவர்கள் என்பதால் சாதகமற்ற வி‌ஷயங்களை கூட இப்போது உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து கொள்வீர்கள். அலுவலகத்தில் சில சங்கடமான நிகழ்வுகள் நடக்கும். உங்களுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் அதை சமாளிப்பீர்கள்.
சுக்கிரன் வலுப்பெறுவதால் உங்களில் சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும் வகையில் சில ஆரம்பங்கள் இருக்கும். குருபகவான் இனி நல்ல பலன்களை தரப்போவதால் இந்த வாரத்தில் இருந்து தாராளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.
கும்பம்
வார ஆரம்பமே கும்பத்திற்கு சந்தி ராஷ்டம நாளாக ஆரம்பிக்கிறது. ஆயினும் இது சந்திரன் வலுவிழந்த அமாவாசை நிலை என்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. இருந்தாலும் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் நல்ல நிலையில் இருப்பதால் நன்மைகள் நடக்க தடையில்லை. சிலருக்கு மட்டும் அலுவலகம், தொழிலில் எரிச்சலுட்டும் வி‌ஷயங்கள் நடக்கும். கும்பத்தினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது.
இளைய பருவத்தினர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். தேவையற்ற வீண் சண்டைகள் வரும். வீட்டில் கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் முறைத்துக் கொண்டு இருப்பீர்கள். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் உதவிகளைச் செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். 8,9,12, ஆகிய நாட்களில் பணம் வரும். 7ம்தேதி இரவு 8.51 மணி முதல் 9ந்தேதி இரவு 11.29 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு வி‌ஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மையை தரும்.
மீனம்
இந்த வாரத்திலிருந்து ராசிநாதன் குரு ராசியைப் பார்க்கப்போவதால் மீன ராசிக்காரர்களுக்கு இனி என்றும் யோகம்தான். இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தீர்கள். இனிமேல் மீனம் தூள் கிளப்பலாம். எந்த ஒரு வி‌ஷயத்திலும் இனி அதிர்ஷ்டம் கை கொடுக்கும். வாரம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். தொழிலாளிகளுக்கு சம்பளஉயர்வு இதரபடிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பாராத இடத்திலிருந்து தேவையான நேரத்தில் உதவிகளும், சலுகைகளும் உண்டு. தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். 8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 9ம்தேதி இரவு 11.29 மணி முதல் 12ம்தேதி அதிகாலை 4.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

Label