இத்தாலி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது Posted on 25-Aug-2016
ரோம்:
இத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 247 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300-க்கும் அதிகமானவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிக்கி கிடக்கும் பலரில் சிலர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதாலும் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பீதியில் இருந்து இன்னும் விலகாத ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்தபடி, வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.